

புதுடெல்லி: தொழிற்சாலைகளின் உற்பத்தி திறன், வேலைவாய்ப்பு, மூலதனம் உள்ளிட்டவை குறித்து மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை ஆண்டுதோறும் ஆய்வு நடத்தி விரிவான அறிக்கையை வெளியிடுகிறது. இதன்படி 2022-23-ம் ஆண்டுக்கான ஆய்வறிக்கைநேற்று முன்தினம் வெளியிடப்பட் டது. அதில் கூறியிருப்பதாவது:
கடந்த 2021-22-ம் நிதியாண்டில் உற்பத்தித் துறையில் 1.7 கோடி பேர் வேலைவாய்ப்பினை பெற்ற னர். இந்த துறையில் கடந்த 2022-23-ம் நிதியாண்டில் 1.9 கோடிபேர் வேலைவாய்ப்பினை பெற்றுள்ளனர். இது 7.6% வளர்ச்சி ஆகும்.
தமிழ்நாடு முதலிடம்: உற்பத்தித் துறையில் அதிகம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கிய மாநிலங்களின் பட்டியலில் 15 சதவீதத்துடன் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது. இதற்கு அடுத்து 12.85 சதவீத பங்களிப்புடன் மகாராஷ்டிரா 2-ம் இடத்திலும், 12.62 சதவீத பங்களிப்புடன் குஜராத்3-ம் இடத்திலும் உள்ளன. உத்தரபிரதேசம் (8.4%) 4-ம் இடத்தையும் கர்நாடகா (6.58%) 5-ம் இடத்தையும் பிடித்துள்ளன. உற்பத்தித் துறை வேலைவாய்ப்பில் இந்த 5 மாநிலங்களின் பங்களிப்பு 55 சதவீதமாக உள்ளது.
நாடு முழுவதும் உற்பத்தி துறையில் சுமார் 2.53 லட்சம் ஆலைகள் செயல்படுகின்றன. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 40,000 ஆலைகள் இயங்குகின்றன. இதற்கு அடுத்தபடியாக குஜராத்தில் 31,000 ஆலைகள், மகாராஷ்டிராவிராவில் 26,000 ஆலைகள் உள்ளன. உத்தர பிரதேசம், ஆந்திரா ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. தொழிலாளர்களின் ஆண்டு வருவாய் கடந்த 2021-22-ம் நிதியாண்டில் ரூ.1.94 லட்சமாக இருந்தது. இது 2022-23-ம் நிதியாண்டில் ரூ.2.05லட்சமாக உயர்ந்துள்ளது. இவ் வாறு அதில் கூறப்பட்டுள்ளது.