Published : 03 Sep 2024 08:30 PM
Last Updated : 03 Sep 2024 08:30 PM
கோவை: கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் கோவையில் செப்டம்பர் 21-ம் தேதி நடக்கிறது. இளைஞர்கள் விவரங்களை பதிவு செய்து பங்கேற்று பயன் பெறலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: “கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலம் இளைஞர்கள் பயன்பெறும் வகையில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் செப்டம்பர் 21-ம் தேதி கோவை மாவட்டம் பொள்ளாச்சி மெயின் சாலை, ஈச்சனாரியில் அமைந்துள்ள ரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முகாமில், கோவை மற்றும் பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதியிலிருந்து உற்பத்தித்துறை, ஜவுளித்துறை, இன்ஜினியரிங், கட்டுமானம், ஐ.டி, ஆட்டோமொபைல்ஸ், விற்பனைத்துறை, மருத்துவம் சார்ந்த தனியார் துறைகள் உள்ளிட்ட 250-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்ற உள்ளன.
15,000-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு, பட்டப்படிப்பு, முதுகலை பட்டப்படிப்பு, தொழில் கல்வி பயின்றவர்கள், செவிலியர்கள், பொறியியல் மாணவர்கள் என அனைத்து பிரிவினரும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்குபெறலாம். இம்முகாமில் கலந்துகொள்ளலாம். வயது வரம்பு இல்லை. அனுமதி முற்றிலும் இலவசம்.வேலைவாய்ப்பு தேடும் மனுதாரர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் விவரங்களை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். முகாமில் பங்கேற்க விரும்பும் இளைஞர்கள் தங்களது சுயவிவரம் (பயோடேட்டா) மற்றும் கல்விச் சான்றுகளின் நகல்களுடன் கலந்து கொள்ள வேண்டும்.
தேர்வு செய்யப்படுவோருக்கு பணி நியமன ஆணை உடனுக்குடன் வழங்கப்படும். இந்த முகாமில் பணி நியமனம் பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படாது. மேலும் விவரங்களுக்கு 0422-2642388, 94990 55937 ஆகிய எண்களில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்பு கொள்ளலாம். அதே போல் முகாமில் பங்கேற்க விரும்பும் தனியார் தொழில் நிறுவனங்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு 97901 99681 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். வேலைவாய்ப்பு தேடுவோர் மற்றும் வேலைவாய்ப்பு வழங்கும் தொழில் நிறுவனங்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி அதிக எண்ணிக்கையில் பங்கேற்று பயன்பெறலாம்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT