டிப்ளமா, ஐடிஐ கல்வித் தகுதி கொண்ட 861 காலிப் பணியிடங்களுக்கு நவம்பரில் தேர்வு: டிஎன்பிஎஸ்சி

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: டிப்ளமா மற்றும் ஐடிஐ கல்வித் தகுதி கொண்ட 861 காலிப்பணியிடங்களை நிரப்ப நவம்பர் மாதம் போட்டித்தேர்வு நடத்தப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வுக்கான (டிப்ளமா மற்றும் ஐடிஐ கல்வித்தகுதி) அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. இதில், உதவி வேதியியலர், உதவி பயிற்சி அலுவலர் (சுருக்கெழுத்து), திட்ட உதவியாளர், மோட்டார் வாகன ஆய்வாளர் (கிரேடு-2), வரைவாளர் (கிரேடு-3), விடுதி கண்காணிப்பாளர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர், இளநிலை வரைவு அலுவலர், இளநிலை தொழில்நுட்ப உதவியாளர், சிறப்பு மேற்பார்வையாளர், சர்வேயர், உதவி வேளாண் அலுவலர், மேற்பார்வையாளர் (நெசவு), ஆவின் நிர்வாகி (ஆய்வகம்), ஏசி டெக்னீசியன் என பல்வேறு விதமான பதவிகள் இடம்பெற்றுள்ளன.

சில வகை பதவிகளுக்கு பாலிடெக்னிக் படிப்பும், சில பணிகளுக்கு ஐடிஐ-யும் கல்வித்தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பு தகுதியும் பணிக்கு பணி மாறுபடும். உரிய கல்வித் தகுதியும், வயது வரம்பு தகுதியும் உள்ளவர்கள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தை (www.tnpsc.gov.in) பயன்படுத்தி செப்டம்பர் 11-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதற்கான தேர்வு நவம்பர் 9 மற்றும் 11, 12, 13, 14 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை, ஒவ்வொரு பதவிக்குரிய கல்வித்தகுதி, காலியிடங்கள், தேர்வு கட்டணம் உள்ளிட்ட இதர விவரங்களை இணையதளத்தில் விரிவாக அறிந்து கொள்ளலாம் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

ஆர்டிஓ ஆகலாம்: ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணி தேர்வில் மோட்டார் வாகன ஆய்வாளர் (கிரேடு-2) பதவியில் 45 காலியிடங்கள் இடம்பெற்றுள்ளன. இதற்கான கல்வித்தகுதி மெக்கானிக்கல் இன்ஜினியரிங் அல்லது ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் டிப்ளமா ஆகும். அதோடு இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு பொதுப்பிரிவினருக்கு 34 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு (பிசி, பிசி-முஸ்லிம், எம்பிசி, எஸ்சி, எஸ்டி) வயது வரம்பு கட்டுப்பாடு கிடையாது. போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்புத் துறையில் நேரடியாக மோட்டார் வாகன ஆய்வாளர் (கிரேடு-2) பதவியில் சேருவோர் மோட்டார் வாகன ஆய்வாளர் (கிரேடு-1), மண்டல போக்குவரத்து அதிகாரி (ஆர்டிஓ), துணை ஆணையர், இணை ஆணையர் என படிப்படியாக பதவி உயர்வு பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in