எச்சிஎல் நிறுவனத்தில் எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு வேலை வாய்ப்புடன் கூடிய பட்டப் படிப்பு படிக்க வாய்ப்பு

எச்சிஎல் நிறுவனத்தில் எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு வேலை வாய்ப்புடன் கூடிய பட்டப் படிப்பு படிக்க வாய்ப்பு
Updated on
1 min read

சென்னை: பிளஸ் 2 முடித்த எஸ்சி, எஸ்டி மாணவர்கள் எச்சிஎல் நிறுவனத்தில் வேலைவாய்ப்புடன் கூடிய பட்டப்படிப்பு படிக்க தமிழக அரசின் தாட்கோ நிறுவனம் சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழக (தாட்கோ) நிர்வாக இயக்குநர் கே.எஸ். கந்தசாமி இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: "எச்சிஎல் நிறுவனத்தில் வேலைவாய்ப்புடன் கூடிய பட்டப்படிப்பு (பிஎஸ்சி கம்ப்யூட்டிங் டிசைனிங்,. பிகாம், பிசிஏ, பிபிஏ) படிக்க ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகி்ன்றன.

அவர்கள் 2022 - 2023 அல்லது 2023 - 2024-ம் கல்வி ஆண்டில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 2022 - 2023ம் ஆண்டு படித்து முடித்திருந்தால் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்ணும் , 2023 - 2024ம் ஆண்டு படித்திருந்தால் 75 சதவீத மதிப்பெண்ணும் அவசியம். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு எச்சிஎல் டெக்னாலஜீஸ் நிறுவனத்தில் ஓராண்டு பயிற்சி அளித்து நிரந்தர வேலைவாய்ப்பு அளிக்கப்படும்.

அதோடு ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற பிட்ஸ் பிலானி கல்லூரியில் பிஎஸ்சி கம்ப்யூட்டிங் டிசைனிங் பட்டப்படிப்பு, தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் பிசிஏ படிப்பு, அமிட்டி பல்கலைக்கழகத்தில் பிசிஏ, பிபிஏ, பிகாம் படிப்பு, நாக்பூர் ஐஐஎம்-ல் ஒருங்கிணைந்த மேலாண்மை பட்டப்படிப்பு படிக்கவும் வாய்ப்பு பெற்றுத்தரப்படும். தகுதியான மாணவர்கள் எச்சிஎல் நடத்தும் நுழைவுத்தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுவர்.

இந்நுழைவுத் தேர்வுக்கு பயிற்சி தாட்கோ மூலம் வழங்கப்படும். ஓராண்டு கால பயிற்சிக்கான செலவினத்தை தாட்கோ நிறுவனமே ஏற்றுக்கொள்ளும். பணியமர்த்தப்படுவோருக்கு ஆரம்ப ஊதியமாக ரூ.17 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை கிடைக்கும். பின்னர் திறமைக்கு ஏற்ப ரூ.50 ஆயிரம் முதல் ரூ.70 ஆயிரம் வரை பதவி உயர்வு அடிப்படையில் பெறலாம். இத்திட்டத்தில் சேர்ந்து பயன்பெற விரும்பும் மாணவர்கள் தாட்கோ இணையதளத்தில் (www.tahdco.com) பதிவுசெய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in