

சென்னை: ஆகஸ்ட் இறுதிக்குள் காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுப்பதாக தொழிற்சங்கத்தினருடனான பேச்சுவார்த்தையில் மின்வாரியம் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.
சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமையகத்தில் மின்வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி, தொமுச, ஐஎன்டியுசி, சிஐடியு உள்ளிட்ட 19 சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், வாரிய நிர்வாகம் தரப்பில் இணை மேலாண் இயக்குநர் விஷு மகாஜன் உள்ளிட்டோரும், தொழிற்சங்கங்கள் தரப்பில் நிர்வாகிகள் மணிமாறன், சேவியர், ஜெய்சங்கர், ராஜேந்திரன், விஜயரங்கன், சுப்பிரமணியன், கோவிந்தராஜன், சேக்கிழார்உள்ளிட்ட நிர்வாகிகளும் பங்கேற்றனர். தொழிற்சங்கங்கள் தரப்பில் மின்வாரியத்தில் வேலைப்பளு காரணமாக ஏற்படும் மின் விபத்துகளை தடுக்கும் வகையில் முதல்கட்ட காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து பேசினர்.
இதற்கு நிர்வாகம் தரப்பில் வழங்கப்பட்ட உத்தரவாதம் குறித்து தொழிற்சங்கத்தினர் கூறியதாவது: காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்து இம்மாத இறுதிக்குள் அரசுதரப்பில் இருந்து நற்செய்தி வெளியாகும். இதுதொடர்பாக அனைத்துநடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஊதிய உயர்வு 2-வதுதொகை 3 தவணைகளக வழங்கப்படும். கடந்த ஊதிய உயர்வில் விடுபட்ட 6 சதவீதம் விரைவில் அளிக்கப்படும். வேலைப்பளு தொடர்பான குழு அமைக்கப்படும். ஊதிய உயர்வுக்கான குழுவும் அமைக்கப்படும் எனநிர்வாகம் தெரிவித்ததாக தொழிற்சங்கத்தினர் கூறினர்.