தட்டச்சு, சுருக்கெழுத்து, கணக்கியல் தேர்வுகள்: மறுமதிப்பீட்டுக்கு ஜூன் 13-க்குள் விண்ணப்பிக்கலாம்

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: தட்டச்சு, சுருக்கெழுத்து, கணக்கியல் தேர்வுகளுக்கான மறுமதிப்பீட்டுக்கு ஜூன் 13-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தொழில்நுட்பக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தொழில்நுட்பக் கல்வி ஆணையர் கொ. வீரராகவ ராவ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தால் கடந்த பிப்ரவரி மாதம் நடத்தப்பட்ட தட்டச்சு, சுருக்கெழுத்து, கணக்கியல் தேர்வுகளில் மறுமதிப்பீட்டுக்காக விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்தவர்கள் அந்நகலை www.tndtegteonline.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இதைத்தொடர்ந்து, அவர்கள் மறுமதிப்பீட்டுக்கு ஆன்லைன் வாயிலாக ஜுன் 13-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

மறுமதிப்பீடு கோரி விண்ணப்பிக்கும்போது ஒன்றுக்கு மேற்பட்ட பாடங்களாக இருப்பின் ஒவ்வொரு பாடத்துக்கும் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும். மறுமதிப்பீடு கட்டணமாக தட்டச்சு பாடம் ஒன்றுக்கு ரூ.400-ம் (முதல் தாள் மற்றும் 2-ம் தாள்), சுருக்கெழுத்து, கணக்கியல் பாடம் ஒன்றுக்கு ரூ.500 வீதம் ஆன்லைனில் கட்டணத்தை செலுத்த வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்காமல் பழைய விண்ணப்பத்தை கொண்டு தபால் மூலம் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்கப்படாது.

விடைத்தாள் நகல் பெறுவதற்கு விண்ணப்பித்தவர்கள் மட்டுமே மறுமதிப்பீட்டுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க தகுதியுடையவர் ஆவர். மறுமதிப்பீடு தொடர்பான விவரங்களை தொழில்நுட்பக்கல்வி இயக்ககத்தின் இணையதளத்தில் (www.dte.tn.gov.in) இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in