

சென்னை: தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சுமார் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உதவி பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றில் 4 ஆயிரம் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வு அறிவிப்பாணையை ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) கடந்த மார்ச் 14-ம் தேதி வெளியிட்டது. அதில் தகுதியான பட்டதாரிகள் தேர்வுக்கு ஏப்ரல் 29-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதற்கிடையே பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணிபுரிவதற்கு முதுநிலை பட்டப் படிப்புடன் நெட்/செட் அல்லது பிஎச்டி முடித்திருக்க வேண்டும். அந்த வகையில் தமிழகத்தில் 6 ஆண்டுகளுக்கு பின்னர்தற்போது செட் தேர்வு ஜூன் 3-ம் தேதி நடத்தப்பட உள்ளது. இத்தேர்வு எழுத இருப்பவர்களையும் உதவி பேராசிரியர் பணித் தேர்வுக்கு அனுமதிக்க வேண்டுமென பட்டதாரிகள் தரப்பில் கோரிக்கைகள் வைக்கப்பட்டன.
அதையேற்று செட் தேர்வுக்குஎழுதவுள்ளவர்களும் உதவி பேராசிரியர் பணித் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். எனினும், அவர்கள் ஜூனில் நடைபெறவுள்ள செட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமேஉதவி பேராசிரியர் பணித் தேர்வெழுத அனுமதிக்கப்படுவார்கள். இதற்காக டிஆர்பி இணையதளத்தில் ( www.trb.tn.gov.in) சிறப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இதுதவிர தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசமும் வரும் மே 15-ம் தேதி மாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என டிஆர்பி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.