

சென்னை: அரசு பள்ளிகளில் 1,763 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த பிப்ரவரி 9-ம் தேதி வெளியிட்டது.
இதற்காக ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் மார்ச் 20 வரை நீட்டிக்கப்பட்டது. இத்தேர்வுக்கு தகுதித்தேர்வு தாள்-1 தேர்ச்சி பெற்றுள்ள இடைநிலை ஆசிரியர்கள் ஏராளமானோர் விண்ணப்பித்துள்ளனர். போட்டித் தேர்வு ஜுன் 23-ம் தேதி நடத்தப்பட உள்ளது.
இதற்கிடையே, அரசுப் பள்ளிகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டஇடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும் அவற்றை நிரப்புவதற்கு தொடக்கக்கல்வி இயக்ககம் அனுமதி கோரியிருந்த நிலையில் அனைத்துகாலியிடங்களையும் நிரப்புவதற்கு நிதித்துறை ஒப்புதல் அளிக்கவில்லை. 1,763 இடங்களுக்கு மட்டுமே ஒப்புதல் அளித்தது. இதையடுத்து 1,763 காலியிடங்களை நிரப்புவதற்கு தொடக்கக் கல்வி இயக்குநரகம் நடவடிக்கை மேற்கொண்டது. காலியாகவுள்ள 5 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அது தயாராக இருந்தும் நிதித்துறையின் ஒப்புதல் கிடைக்காமல் போனதால் அவற்றை முழுமையாக நிரப்ப முடியவில்லை.
சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்: அரசு தொடக்கப் பள்ளிகளில் சேரும் குழந்தைகளுக்கு தரமான அடிப்படை கல்வியறிவு கிடைக்க வேண்டுமானால் தேவையான இடைநிலை ஆசிரியர்கள் பணியில் இருக்க வேண்டும். கட்டாய கல்விஉரிமை சட்டத்தின்படி தொடக்கப் பள்ளிகளில் 25 மாணவர்களுக்கும், நடுநிலைப் பள்ளிகளில் 30 மாணவர்களுக்கும் ஒரு ஆசிரியர் பணியமர்த்தப்பட வேண்டும்.
இதை கருத்தில்கொண்டு, காலியாகவுள்ள அனைத்து இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்பஅரசு முன்வரவேண்டும் என்று கல்வியாளர்களும் சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தியுள்ளனர்.