

சென்னை: முதல்வரின் ஸ்பெயின் பயணம் மூலம் தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் வர வாய்ப்புள்ளதாக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்தார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் ஸ்பெயின் பயணத்தின்போது, தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவும் உடன் சென்றிருந்தார். இந்நிலையில், பயணத்தை முடித்துக் கொண்டு முதல்வர் ஸ்டாலினுடன் அவரும் சென்னை திரும்பினார். இந்நிலையில் தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது:
தமிழக தொழில் துறை இதுவரை இல்லாத வகையில் வரலாறு காணாத வளர்ச்சியை கண்டு வருகிறது. முதல்வர் பல நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்லாயிரக்கணக்காண கோடி மதிப்பில் தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்த்துள்ளார். முதலில் ஐக்கிய அரபு நாடுகள், அதன்பின் சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு சென்றார். தற்போது வெற்றிகரமாக ஸ்பெயின் நாட்டில் சுற்றுப்பயணத்தை முடித்து வந்துள்ளார்.
ஸ்பெயின் பயணம் மூலம் ரூ.3,440 கோடிக்கான முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. எடிபான் நிறுவனம் ரூ.540 கோடிக்கும், ரோக்கோ நிறுவனம் ரூ.400 கோடிக்கும், ஹபக் லாய்டு நிறுவனம் ரூ.2,500 கோடிக்கும் முதலீடு செய்ய உள்ளன.
ஹபக் லாய்டு முதலீடுகள் தமிழகம் முழுவதும் வர உள்ளன. எடிபான் நிறுவனம் சென்டர் ஆஃப் எக்சலன்ஸ் ஒன்றை அமைக்க உள்ளது. அதில், பல சிறப்பம்சங்கள் உள்ளன. இதுகுறித்த அறிவிப்பை முதல்வர் வெளியிடுவார். படித்த இளைஞர்கள், ‘நான் முதல்வன்’ திட்டம் மூலம் திறன் மேம்பாட்டு பயிற்சி பெறும் இளைஞர்களுக்கான சிறப்பான அறிவிப்பு அதில் உள்ளது.
முதல்வரின் பயணம் மூலம், உயர்தர அளவிலான பல்லாயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் தமிழகம் முழுவதும் வர வாய்ப்பு உள்ளது. முதல்வர் ஜப்பான் சென்று வந்தவுடன், ஜப்பான் நிறுவனம் தமிழகத்தில் பணியை தொடங்கிவிட்டது. உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களில் பல திட்டங்கள் இம்மாதமே தொடங்கப்பட உள்ளன. உலக முதலீட்டாளர்கள் மாநாட்டு ஒப்பந்தங்களில் 70 சதவீதத்துக்கு அதிகமானவை நடைமுறைக்கு வர வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.