

புதுடெல்லி: இஸ்ரேல் - ஹமாஸ் தீவிரவாதி களிடையே தொடர்ந்து போர் நடைபெற்று வருகிறது. போர் தொடங்கிய பிறகு, இஸ்ரேலில் கட்டுமான தொழிலில் ஈடுபட்டு வந்த பாலஸ்தீனர்களின் வேலைரத்து செய்யப்பட்டது.
இதையடுத்து இஸ்ரேலில் வேலை செய்வதற்காக பல நாடுகளில் இருந்து ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி, இந்தியாவில் ஆட்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. அதற்காக இஸ்ரேலில் இருந்து 15 பேர் கொண்ட குழுவினர் இந்தியா வந்துள்ளனர். அவர்கள் முதல் கட்டமாக ஹரியாணாவில் கடந்த ஜனவரி 16-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை வேலைவாய்ப்பு முகாம் நடத்தினர். அதில் கட்டுமான வேலை செய்ய 1,370 பேர் பங்கேற்றனர். அவர்களில் 530 பேரை இஸ்ரேல் குழுவினர் தேர்வு செய்தனர். அதன் பின்னர் உத்தர பிரதேசத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை வரை முகாம்நடத்தப்பட்டது.
அதில் 7,182 பேர் பங்கேற்றனர். அவர்களில் 5,087 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இதுகுறித்து இந்திய திறன் மேம்பாட்டு கழகம் கூறும்போது, ‘‘சுமார் 5,000 தொழிலாளர்கள் இஸ்ரேலில் 5 ஆண்டு வேலை செய்ய சென்றால், அதன்மூலம் இந்தியாவுக்கு ரூ.5,000 கோடிவருவாய் கிடைக்கும்’’ என்று தெரிவித்துள்ளது. தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு மாதம் ரூ.1.37 லட்சம் சம்பளம் வழங்கப்படும். அத்துடன், தங்குமிடம், உணவு, காப்பீடு போன்றவை இலவசம். தவிர தொழிலாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.16,515 போனசாக வழங்கப்படும்.