

கடலூர்: தெற்கு மண்டல இந்திய விமான ஆணையத்தில் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் அருண் தம்பு ராஜ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தெற்கு மண்டல இந்திய விமான நிலைய ஆணையத்தின் அறிவிப்பு கடந்த டிசம்பர் மாதம் வெளியிடப்பட்டது. இந்திய விமான நிலைய ஆணையத்தின் மூலம் நடத்தப்பட உள்ள இத்தேர்வில் இள நிலை உதவியாளர் ( தீயணைப்பு பணி ), இளநிலை உதவியாளர் ( அலுவலகம் ), முதுநிலை உதவியாளர் ( மின்னணுவியல் ) மற்றும் முதுநிலை உதவியாளர் ( கணக்கு ) போன்ற பல்வேறு காலிப் பணியிடங்களுக்கு ஜன. 26-ம் தேதி வரை விண்ணப்பங்கள் வர வேற்கப்படுகிறது.
இத்தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கு ரூ.1,000 விண்ணப்பக் கட்டணமாக ( பொதுப் பிரிவினர், பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள், இதர பிரிவினர் ) செலுத்த வேண்டும். ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர், முன்னாள் ராணுவத்தினர், பெண்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்வுக்கு கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தகுதி வாய்ந்த இளைஞர்கள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு www.aai.aero என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.