மின்வாரிய வருவாய் பற்றாக்குறையை குறைக்க பிரதமரின் சூரிய வீடு திட்டத்தை ஊக்குவிக்குமா தமிழக அரசு?

மின்வாரிய வருவாய் பற்றாக்குறையை குறைக்க பிரதமரின் சூரிய வீடு திட்டத்தை ஊக்குவிக்குமா தமிழக அரசு?
Updated on
2 min read

சிவகங்கை: மின்வாரிய வருவாய் பற்றாக்குறையைக் குறைக்க பிரதமரின் சூரிய வீடு திட்டத்தை தமிழக அரசு ஊக்குவிக்க வேண்டுமென கோரிக்கை எழுந்தது. தமிழக மின்வாரிய வருவாய், செலவினங்கள் குறித்த வெள்ளை அறிக்கையை கடந்த 25-ம் தேதி மின்துறை அமைச்சர் நிர்மல்குமார் வெளியிட்டார்.

அதன்படி, தமிழக மின்வாரியத்துக்கு கடந்த 2021-26 வரையிலான காலக்கட்டத்தில் ரூ.34,447 கோடி பற்றாக்குறை ஏற்பட்டது. பல ஆண்டுகளாக ஏற் பட்ட பற்றாக்குறையால் கடன் ரூ.2,47,130 கோடியாக உயர்ந்துள்ளது. மேலும், மின் வாரியத்துக்குச் சொந்தமான மின் உற்பத்தி நிலையங்கள் மூலம் மொத்தம் 3,495 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

சுய சார்பு உற்பத்தி நிலையங்கள், காற்றாலை, சோலார் மின் உற்பத்தி நிலையங்களிருந்து சராசரியாக ஒரு யூனிட் ரூ.5.29 வீதம் ரூ.4,246 மெகாவாட், மத்தியத் தொகுப்பிலிருந்து ஒரு யூனிட் ரூ.539 வீதம் 13,566 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறது என்று தெரிவித்திருந்தார்.

மேலும், இழப்பை ஈடுகட்ட மின்வாரியத்துக்கு ஆண்டுக்கு ரூ.17,000 கோடிக்கு மேல் தமிழக அரசு வழங்கினாலும், பற்றாக்குறையாகத்தான் உள்ளது. ஏற்கெனவே குடிசை வீடுகள், விவசாயம், கைத்தறி மற்றும் விசைத்தறிக்கு இலவசம் மற்றும் மானிய மின்சாரம் வழங்கப்படுகிறது.

இந்நிலையில் தவெக அரசு வீடுகளுக்கான 100 யூனிட் இலவச மின்சாரத்தை 200 யூனிட்டாக அதிகரித்துள்ளது. இதனால் வருவாய் பற்றாக்குறை அதிகரிக்க வாய்ப்புள்ளது. கடன் உயராமல் தடுக்க மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் அல்லது வெளியிலிருந்து மின்சார கொள்முதல் அளவை குறைக்க வேண்டும்.

கட்டணத்தை உயர்த்தினால் எதிர்ப்பு கிளம்பும். மின்சார கொள் முதல் அளவைக் குறைக்க மின் வாரியம் தனது மின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். புதிய திட்டங்களைச் செயல்படுத்த பெரிய அளவில் முதலீடு செய்ய வேண்டும். நிலம் கையகப்படுத்துவது, ஊழியர்கள் நியமனத்தில் பல சவால்கள் உள்ளன. அதனால், மத்திய அரசின் பிரதமரின் சூரிய வீடு இலவச மின்சாரத் திட்டத்தை தமிழக அரசு ஊக்கப்படுத்த வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

இத்திட்டத்தில் ஒரு கிலோ வாட் அமைப்புக்கு ரூ.30,000, இரண்டு கிலோ வாட்டுக்கு ரூ.60,000, மூன்று கிலோ வாட் மற்றும் அதற்கு மேல் ரூ.78,000 மானியமாக வழங்குகிறது. ஒரு கிலோ வாட் அமைப்பு மூலம் தினமும் 4 முதல் 5 யூனிட் கிடைக்கும். இரண்டு மாதங்களுக்கு 240 முதல் 300 யூனிட் வரை கிடைக்கும்.

அதேபோல், 2 கிலோ வாட் அமைப்புக்கு 480 முதல் 600 யூனிட் வரை, 3 கிலோ வாட் அமைப்புக்கு 720 முதல் 900 யூனிட் வரை கிடைக்கிறது. இதில் 1 மற்றும் 2 கிலோ வாட் அமைப்பு ஏற்படுத்த 60 சதவீதம் மானியம், 3 கிலோ வாட்டுக்கு 40 சதவீத மானியம் மத்திய அரசு வழங்குகிறது. ஆனால், அவற்றை அமைக்க ஒன்றரை மடங்கு கூடுதலாகச் செலவாவதால், பலர் தயக்கம் காட்டுகின்றனர்.

கூடுதல் செலவை தமிழக அரசு ஏற்றால் பெரும்பாலானோர் தங்களது வீடுகளில் சோலார் பொருத்துவர். தொழில், வணிக நிறுவனங்களிலும் சோலாரை ஊக்கப்படுத்த மானியம் கொடுக்கலாம். இதன்மூலம், வெளியிலிருந்து மின்சார கொள்முதல் குறைந்து வருவாய் இழப்பு இருக்காது. இரவு நேர மின்சாரத் தேவைக்காக, வீடுகளில் கூடுதலாக உற்பத்தியாகும் மின்சாரத்தைச் சேமிக்க மின்கலங்களுக்கு (பேட்டரி) மானியம் கொடுக்கலாம்.

அதேபோல் தனியார் சோலார் மின் உற்பத்தி நிலையங்களில் மின்சாரத்தைச் சேகரிக்கும் மின்கலங்களை வைக்க ஊக்கப்படுத்தலாம். இதுகுறித்து ஓய்வுபெற்ற மின்வாரிய அதிகாரிகள் சிலர் கூறியதாவது: மின்சார வாகனங்கள் பயன்பாடு அதிகரித்து வருகிறது. குளிரூட்டி, குளிர்சாதனப் பெட்டி போன்ற மின் உபயோகப் பொருட்கள் பயன்பாடு அதிகரிக்கின்றன. இனி மின்தேவை நாளுக்கு நாள் அதிகரிக்கத்தான் செய்யும்.

பெரும்பாலானோர் இரு சக்கர வாகனத்துக்கான மின் சாரத்தை வீடுகளிலிருந்தே எடுக்கின்றனர். இதனால், பிரதமரின் சூரிய வீடு திட்டத்தைச் செயல்படுத்தினால் தங்களுக்குத் தேவையான மின்சாரத்தை அவரவரே தயாரித்துக் கொள்வர்.

ஆங்காங்கே பழுதுநீக்கும் மையங்களை மட்டும் ஏற்படுத்தினால் போதும். சோலாரை பராமரிப்பதும் எளிது. சோலார் மின்சாரத்தால் மாசு இருக்காது. இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பும்குறையும். அரசு இதனை முதலீடாக நினைத்து ஊக்கப்படுத்த வேண்டும். இதன்மூலம் சோலார், மின்கலம் தயாரிப்புத் தொழிலும் மேம்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

மின்வாரிய வருவாய் பற்றாக்குறையை குறைக்க பிரதமரின் சூரிய வீடு திட்டத்தை ஊக்குவிக்குமா தமிழக அரசு?
பற்கள் தேயுமா? | டிங்குவிடம் கேளுங்கள்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in