மத்திய பட்ஜெட் 2026: வர்த்தகர்கள் மகிழ்ச்சி... விவசாயிகள் ஏமாற்றம் ஏன்?

மத்திய பட்ஜெட் 2026: வர்த்தகர்கள் மகிழ்ச்சி... விவசாயிகள் ஏமாற்றம் ஏன்?
Updated on
3 min read

திருச்சி / கரூர்: தமிழ்நாடு உபயோகிப்பாளர் பாதுகாப்புக் குழுவின் செயலாளரான எஸ்.புஷ்பவனம் மத்திய பட்ஜெட் குறித்து தெரிவித்துள்ளது:

மருந்தக கல்வி, ஆராய்ச்சிக்கு 3 புதிய நிறுவனங்கள், செமி கண்டக்டர் ஆராய்ச்சிக்காக ரூ.40,000 கோடி, விளையாட்டு பொருட்கள் உற்பத்திக்கு ஆதரவு, மிகப் பெரிய ஜவுளி பூங்காக்கள் நிறுவ முன்வந்துள்ளது, சிறுகுறு தொழில்களுக்கு ஆலோசனை மையம் ஏற்படுத்துவது, அடிப்படை அமைப்புக்காக பொது மூலதன செலவாக ரூ.12.2 லட்சம் கோடி ஒதுக்கியிருப்பது வரவேற்கத்தக்கது.

5 லட்சம் மக்கள்தொகைக்கு மேல் உள்ள நகராட்சிகளுக்கு ரூ.5,000 கோடி உதவித்தொகை தர முன்வந்திருப்பது, மாநகராட்சிகள் நிதிநிலையை பெருக்குவதற்காக கடன் பத்திரங்கள் வெளியிட்டால் ரூ.100 கோடி உதவித்தொகை அளிப்பது தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

ஹைதராபாத்-சென்னை மற்றும் சென்னை-பெங்களூரு உயர்வேக ரயில்பாதை அமைக்க முன்வந்திருப்பது, வங்கிகளின் சீர்திருத்தத்துக்காக நுகர்வோர் பாதுகாப்பு உள்ளிட்ட பல அம்சங்களை ஆராய உயர்மட்ட கமிட்டி அமைத்திருப்பதும் வரவேற்கத்தக்கது. பணவீக்கத்தையும், நிதி பற்றாக்குறை சதவீதத்தையும் குறிப்பிட்ட எல்லைக்குள் வைத்திருப்பது நாட்டின் பொருளாதாரத்தை கவனமாக கையாண்டதற்கு அறிகுறி.

கரூர் ஜவுளி உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவரும், இந்திய ஏற்றுமதி கழக கூட்டமைப்பு மண்டலத் தலைவருமான பி.கோபாலகிருஷ்ணன்:

எம்எஸ்எம்இக்கள், வேலைவாய்ப்பு உருவாக்கம், ஜவுளி போன்ற துறைகளுக்கு வலுவான ஆதரவு அளிக்கும் வகையில் மத்திய பட்ஜெட் உள்ளது. கரூர், திருப்பூர், கோவை, ஈரோடு போன்ற தமிழகத்தின் முக்கிய ஜவுளி மையங்களுக்கு இது பெரும் நன்மையை அளிக்கும். மேலும் மேன் மேட் பைபர், டெக்னிக்கல் ஜவுளி, பிஎம் மித்ரா பூங்கா திட்டங்கள், தொழில்நுட்ப மேம்பாடு, கட்டமைப்பு வசதிகளுக்கான கவனம் கரூர் ஜவுளி துறையின் ஏற்றுமதி வளர்ச்சிக்கு வலுவான அடித்தளமாக அமையும்.

திருச்சி ஏற்றுமதி, இறக்குமதி கூட்டமைப்பின் தலைவர் என்.கனகசபாபதி கூறியது:

நிகழாண்டு பட்ஜெட், ஏற்றுமதியை ஒரு முக்கிய பொருளாதார உந்து சக்தியாக மாற்றும் அரசின் நோக்கத்தை தெளிவாக வெளிப்படுத்துகிறது. ஏற்றுமதிப் பொருட்களின் உற்பத்தி செலவைக் குறைக்கும் வகையில் முக்கிய மூலப்பொருட்களின் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

செல்போன் மற்றும் பிசிபிஏ தயாரிப்பதற்கான உதிரிபாகங்கள், இறக்குமதி வரி பூஜ்ஜியமாக குறைக்கப்பட்டுள்ளது. இது எலெக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதியை பெருமளவு ஊக்குவிக்கும். லித்தியம், கோபால்ட் போன்ற 25 அத்தியாவசிய கனிமங்கள் மீதான சுங்க வரி முழுமையாக விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. இது பேட்டரி எலெக்ட்ரிக் வாகனத் துறையில் இந்தியா ஒரு ஏற்றுமதி மையமாக உருவெடுக்க வழிவகுக்கும்.

இறால் வளர்ப்புக்கு தேவையான தீவனங்களுக்கான தீவன இறக்குமதி வரி குறைப்பு ஏற்றுமதி வளர்ச்சிக்கு கைகொடுக்கும். திருச்சி, கரூர், தஞ்சாவூர் போன்ற டெல்டா மாவட்டங்களில் இருந்து விவசாயப் பொருட்கள் மற்றும் வாழை போன்ற அழுகும் பொருட்களை ஏற்றுமதி செய்ய நவீன பேக் ஹவுஸ் மற்றும் உலர் துறைமுகம் (ட்ரை போர்ட்) குறித்த அறிவிப்பு இல்லாதது டெல்டா விவசாய ஏற்றுமதியாளர்களுக்கு ஏமாற்றம் அளித்துள்ளது.

‘பணவீக்கம் பல மடங்கு அதிகரித்து விலைவாசி உயரும்’

மத்திய பட்ஜெட் குறித்து தஞ்சாவூர் பூண்டி புஷ்பம் கல்லூரி பொருளாதாரத் துறை முன்னாள் பேராசிரியர் ஆர்.பழனிவேலு தெரிவித்துள்ளது: பெண் தொழில்முனைவோர் திறன் மேம்பட்டுத் திட்டம், விளையாட்டுத் துறைக்கான சிறப்புத் திட்டம், தென்னை மேம்பாட்டுத் திட்டம், மின்சார வாகனங்களுக்கு வரி குறைப்பு, விபத்தின் மூலம் கிடைக்கும் இழப்பீட்டுக்கு வரி விலக்கு ஆகியவை வரவேற்க வேண்டியவை.

ஆனால், நாட்டின் முதுகெலும்பாக கருதப்படும் வேளாண் துறைக்கு நிதி ஒதுக்கீட்டில் கூடுதல் முன்னுரிமை வழங்காதது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்கு அதிக கவனம் செலுத்தியிருக்க வேண்டும்.

இன்னும் 20 சதவீதம் பேர் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளனர். ஆனால், வறுமை ஒழிப்புக்கான திட்டங்கள் இல்லை. இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை வழங்குவதற்கான திட்டங்கள் இல்லை. நாட்டின் பொருளாதார வளர்ச்சி உயர்ந்து வந்தாலும் அடுத்த 3 ஆண்டுகளில் பணவீக்கம் மேலும் பல மடங்கு அதிகரித்து விலைவாசி ஏற்றம் பெறும்.

தமிழ்நாடு காவிரி உழவர்கள் பாதுகாப்பு சங்கச் செயலாளர் சுவாமிமலை சுந்தரவிமல்நாதன்:

மத்திய பட்ஜெட்டில், வேளாண் திட்டங்கள் எதுவும் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. வேளாண் கடன் நிவாரண சட்டங்கள் குறித்த அறிவிப்பு இல்லை. 2014-ல் தேசிய நதிகளை இணைப்பதாக வாக்குறுதி அளித்து பதவிக்கு வந்த பிரதமர் மோடி, இதுவரை நதிகளை இணைக்க நடவடிக்கை எடுக்கவில்லை.

காவிரியைத் தூய்மைப்படுத்தும் திட்டமும் இல்லை. தேங்காய் எண்ணெய், நல்ல எண்ணெய், கடுகு எண்ணெய் ஆகியவற்றை விநியோகிப்பதற்கான திட்டங்களை அறிவிக்காமல், தென்னையை ஊக்குவிப்போம்- எண்ணெய் வித்துகளை ஊக்குவிப்போம் என்பது ஏமாற்று வேலை.

மத்திய அரசின் பட்ஜெட் குறித்து இந்திய விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ஜி. எஸ்.தனபதி:

புதிய ரசாயன உரங்கள் இறக்குமதி கொள்கையால் அம்மோனியா வகை ரசாயன உரங்கள் விலை உயரும். தென்னை உற்பத்தி அதிகரிப்பு திட்டத்தால் தமிழக விவசாயிகளுக்கு பலன் ஏதும் இல்லை. தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களின் கனிமவள மையம் அமைப்பது என்பது கனிமவளங்களை கொள்ளையடிக்க பெரு நிறுவனங்களுக்கு வழி வகுப்பதாகும். இதனால், தமிழகத்தில் இயற்கை வளங்கள் கொள்ளை போகும் அபாயமும், சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்படும்.

காவிரி பாசன விவசாயிகள் நலச்சங்க தலைவர் மகாதானபுரம் ராஜாராம்:

புதிய ஜவுளி பூங்காக்கள், பயோ பார்மா சக்தி திட்டம், தொழில் வளர்ச்சி திட்டம், அரிய வகை கனிமங்கள் உற்பத்தி, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் இயற்கை நூல் பருத்தி புது திட்டம், அதிவேக ரயில் பாதை திட்டம், சென்னை, ஆதிச்சநல்லூர் கலாச்சார மையம், நீர்நிலை மீன் வளர்ப்பு, தேங்காய், முந்திரி வளர்ப்பு திட்டம் என்று பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

விவசாயிகள் வருமானத்தை அதிகரிக்க பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்படும் என்று திட்டங்கள் எதுவும் குறிப்பிடாமல் வெறுமனே உள்ள அறிவிப்பு குழப்பமாக உள்ளது. கிராமப்புற வளர்ச்சி, விவசாய மக்கள் கோரிக்கை கண்டு கொள்ளப்படவில்லை இந்த பட்ஜெட் விவசாயிகளுக்கு ஏமாற்றம் தான்.

மத்திய பட்ஜெட் 2026: வர்த்தகர்கள் மகிழ்ச்சி... விவசாயிகள் ஏமாற்றம் ஏன்?
தங்கம், வெள்ளி விலை உச்சம் தொட்ட வேகத்தில் கடும் வீழ்ச்சி அடைவது ஏன்?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in