

கோவை /திருப்பூர்: மக்களவையில் மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இது தொடர்பாக கோவை, திருப்பூர் தொழில்துறையினர் பல்வேறு கருத்துகளை தெரிவித்துள்ளனர்.
தென்னிந்திய பஞ்சாலை சங்கம் (சைமா) துரை பழனிச்சாமி: தற்போது 179 பில்லியன் அமெரிக்க டாலர் ஜவுளி வியாபாரத்தை, 2030-க்குள் 350 பில்லியன் அமெரிக்க டாலராகவும், ஜவுளி ஏற்று மதியை 38 பில்லியனில் இருந்து 100 பில்லியன் அமெரிக்க டாலராகவும் உயர்த்திட, மத்திய ஜவுளி அமைச்சகம் இலக்கு நிர்ணயித்துள்ளது. இது நாட்டில் 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தும். பருத்தி இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள 11 சதவீத வரியை நீக்காதது ஏமாற்றம்.
ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கழகத்தின் தலைவர் ஆ.சக்திவேல்: யுவ சக்தியை மையமாகக் கொண்ட எதிர்காலத்துக்கான பட்ஜெட்டை வரவேற்கிறோம். இந்திய பொருளாதாரத்தை புதுப்பித்து, நாட்டின் நீண்ட கால வளர்ச்சி பாதையை வலுப்படுத்தும் பட்ஜெட். சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், ஜவுளித் துறை, திறன் மேம்பாடு, உட்கட்டமைப்பு, நிலைத்தன்மை மற்றும் உற்பத்தி ஆகிய முக்கிய துறைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
மெகா ஜவுளி பூங்காக்கள் அமைத்தல், இயற்கை மற்றும் செயற்கை நூலிழை மேம்பாட்டுக்கு முக்கியத்துவம், ஒவ்வொரு மாவட்டத்திலும் மகளிர் விடுதிகள் அமைத்தல் போன்றவை, திருப்பூர் போன்ற ஆடை உற்பத்தி மையங்களில் பெண்கள் தொழிலாளர்களின் பங்கேற்பை அதிகரிக்க உதவும். அமெரிக்க சந்தைக்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களுக்காக 20 சதவீதம் ‘மார்க்கெட் போகஸ்’ திட்டம் என தொழில்துறை எதிர்ப்பார்த்திருந்த நிலையில், அறிவிக்கப்படவில்லை.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் இணை செயலாளர் குமார் துரைசாமி: ஜவுளித் துறைக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளனர். ஆனால் அமெரிக்க வர்த்தகத்துக்கு எந்த வித அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றமாக உள்ளது. நீண்ட நாள் கோரிக்கையான செயற்கை நூலிழை தயாரிப்பு ஊக்கு விப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இயந்திர மேம்பாட்டுக்கு மானியம் அறிவிப்பு, சம்ருத் திட்டத்தின் மூலம் திருப்பூரில் ஏராளமான பெண்கள் பயனடைந்த நிலையில் அதன் வெற்றியை தொடர்ந்து சம்ருத் 2 எனும் திறன் மேம்பாடு திட்டம் வரவேற்கத்தக்கது. திறன் மேம்பாட்டுக்கு 5 பல்கலைக்கழகம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் ஒன்றை தமிழகத்திற்கு கேட்டு பெற வேண்டும்.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் உற்பத்தியாளர் (டீமா) சங்கத்தலைவர் முத்துரத்தினம்: அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பால், 4 மாதங்கள் ஆன பின்பும் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்நிலையில், ஜவுளி பின்னலாடை தொழிலுக்கு எந்த முக்கியத்துவமும் அளிக்கப்படவில்லை. குறிப்பாக, இந்தியாவின் முதுகெலும்பு என்பது சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை. அத்துறைக்கு ரூ.10 ஆயிரம் கோடி என்பது மிக, மிகக் குறைவு. ஜவுளித் தொழில் ஈடுபடுபவர்களுக்கு எந்த வகையான அறிவிப்புகளும் இல்லை.
டாக்ட் சங்க தலைவர் ஜேம்ஸ்: பட்ஜெட், ஏமாற்றமும் அதிர்ச்சியும் தருகிறது. கடந்த பட்ஜெட்டில் ரூ.22,000 கோடி ஒதுக்கீடு செய்தது தொழில்துறையினருக்கு பயனளிக்கவில்லை. தற்போது குறு, சிறு நடுத்தர தொழிலுக்கான ஒதுக்கீடு வெறும் ரூ.10,000 கோடி என்பது எவ்விதத்திலும் போதுமானதாக இருக்காது. வெட் கிரைண்டர், கம்ப்ரசர், ஜாப் ஆர்டர்கள், மோட்டார் பம்ப் செட்களுக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்படவில்லை.
கொடிசியா தலைவர் கார்த்திகேயன்: சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு நிதி விடுவிப்பது தொடர்பாக பட்ஜெட் தயாரிப்பு கூட்டத்தில் பங்கேற்று கருத்து தெரிவித்திருந்தோம். அதன் ஒருபகுதியாக சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான வங்கிச்சேவை தொடர்பான உயர் மட்ட அளவிலான குழு அமைக்கப்பட்டிருப்பதை வரவேற்கிறோம். உற்பத்தித்துறையில் மூலப்பொருட்களான தாமிரம், அலுமினியம் விலை கட்டுப்படுத்துவது தொடர்பான அறிவிப்புகள் இல்லை.
ஐடிஎப் கன்வீனர் பிரபு தாமோதரன்: ஜவுளித் துறையில் அனைத்து ஜவுளி மூலப்பொருட்களையும் உள்ளடக்கும் வகையில் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள தேசிய ஃபைபர் மிஷன், நீண்டகால நோக்கில் மூலப்பொருள் பாதுகாப்பும் நிலைத்தன்மையும் ஏற்படுத்தி, இந்தியாவின் ஜவுளி மற்றும் ஆடை ஏற்றுமதியின் உலகளாவிய போட்டித்திறனை உயர்த்தும்.
கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் மற்றும் ஊரக தொழில் முனைவோர் சங்க (காட்மா) தலைவர் சி.சிவக்குமார்: அனைத்து துறைகளிலும் ஏஐ தொழில்நுட்பம், இறக்குமதி செய்யப்படும் லித்தியம் பேட்டரிகளுக்கு வரிவிலக்கு, தனிநபர் வரி தாக்கல் செய்ய ஜூலை 31 வரை கால நீட்டிப்பு மற்றும் வருமான வரி தாக்கல் வழிமுறைகள் எளிமையாக்கப்படும் என்ற அறிவிப்பை வரவேற்கிறோம். மூலப்பொருட்கள் வாங்குவதற்கு கடன் அட்டைகள் வழங்கப்படும் என்ற கடந்த பட்ஜெட் அறிவிப்பு தற்போது வரை செயல்படுத்தப்படாமல் இருப்பது ஏமாற்றமே.
மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு தலைவர் எம்.ஜெயபால்: ஜவுளித் துறையை மேம்படுத்தும் நோக்கில் சமர்த் 2.0 திட்டம், ஜவுளி துறை சார்ந்த திறன்களை வளர்த்தெடுக்க தொழில்துறை மற்றும் தொழில்நுட்ப கல்வித்துறைகளுக்கிடையேயான ஒருங்கிணைப்பு, இயற்கை நூல்கள், குறிப்பாக பருத்தி, கம்பளி உற்பத்தியை ஊக்குவிக்கும் புதிய திட்டங்கள் வரவேற்கத்தக்கவை. ஜாப் ஒர்க் நிறுவனங்களுக்கான ஜிஎஸ்டி 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்படாதது ஏமாற்றத்தை அளிக்கிறது.
தி ஸ்டார்ட் அப் அகாடமி தலைவர் ஆடிட்டர் ஜி.கார்த்திகேயன்: வளர்ச்சியடைந்த இந்தியா – விக்சித் பாரத் என்ற நீண்டகால இலக்கை மனதில் கொண்டு தயாரிக்கப்பட்ட பட்ஜெட் இது. டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பின் ஏற்றத் தாழ்வுகள், தங்கம் மற்றும் வெள்ளி விலைகளின் அதிகரிப்பு, தனியார் முதலீடுகள் எதிர்பார்த்த அளவில் உயராதது போன்ற சவால்களுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த பட்ஜெட்டில் பல அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. இது நாட்டின் நீண்டகால வளர்ச்சிக்கு வலுவூட்டும்.