

வேதாந்தா தலைவர் அனில் அகர்வால்
புதுடெல்லி: வேதாந்தா குழும தலைவர் அனில் அகர்வால் கூறியதாவது: "இந்தியா உற்பத்தி செய்வதை உலக நாடுகள் விரும்பவில்லை. ஆனால், உள்நாட்டு உற்பத்தி மட்டுமே வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்பது உலகின் பிற பகுதிகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
இந்தியா உற்பத்தி துறையில் முன்னேறுவதை எதிர்க்கும் சக்திகளை தடுத்துப் போராட வேண்டும். ஒரு காலத்தில் உணவுக்காக இறக்குமதியை நம்பியிருந்த நாடு, இன்று அதில் தன்னிறைவு பெற்றுள்ளது. அரசு உருவாக்கிய ஒரு மக்கள் இயக்கத்தால் மட்டுமே இது சாத்தியமானது.
இதுபோல இப்போது இந்தியா தனது கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு தேவையில் 90 சதவீதத்தை இறக்குமதி செய்வதால் பலவீனமான நிலையில் உள்ளது. எனவே, உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதைத் தவிர வேறு வழியில்லை. இந்தியாவுக்குத் தேவையான வளங்களும், திறமையான தொழில் முனைவோர்களும் உள்ளனர். நமக்குத் தேவையானது விரிவான ஆய்வுகள் மட்டுமே. இவ்வாறு அவர் தெரிவித்தார்.