

வாஷிங்டன்: போர் நிறுத்தம் கடந்த வாரத்தில் முடிவடைந்த நிலையில், ஈரானுக்கு எதிராக அமெரிக்கா வர்த்தக போரை அறிவித்துள்ளது. இதன்படி, ஈரானுக்கு செல்லும் நிதி ஆதாரங்களை முடக்கும் நோக்கத்துடன், ‘ஆபரேஷன் எகனாமிக் அவுட்காஸ்ட்’ என்ற புதிய நடவடிக்கையை அமெரிக்கா தொடங்கியுள்ளது.
இதன் கீழ், ஈரானுடன் பெட்ரோலியம் மற்றும் பெட்ரோ கெமிக்கல் வர்த்தகத்தில் ஈடுபட்டதாகக் கூறி, 4 இந்திய நிறுவனங்கள் மற்றும் 3 இந்தியர்கள் மீது அமெரிக்க நிதித்துறை கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.
ஈரானை சேர்ந்த பல்வேறு நிறுவனங்களிடமிருந்து பெட்ரோலியப் பொருட்களை இறக்குமதி செய்ததற்காக ‘சதாசிவா ஓவர்சீஸ்’, ‘பிபி சாஃப்ட்டெக்’, ‘பிரக்ருடீஸ் இன்ப்ரா இம்பெக்ஸ் இந்தியா’ ஆகிய நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. அதேபோல, சுங்கத் தரகராகச் செயல்பட்டு, ஈரானிய பெட்ரோ கெமிக்கல் பொருட்களை இந்தியாவுக்கு இறக்குமதி செய்ய உதவியதற்காக ‘போர்ட்ஈசி பார்ட்னர்ஸ் எல்எல்பி’ என்ற நிறுவனம் மீதும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர ‘போர்ட்ஈசி பார்ட்னர்ஸ் எல்எல்பி’ நிறுவனத்தின் முதலீட்டாளர்களான ஹரிஷ் ராமச்சந்திர ரங்கி மற்றும் இத்ரிஸ்மியா அஷ்ரப்மியா ஷேக், ‘பிரக்ருடீஸ் இன்ப்ரா இம்பெக்ஸ் இந்தியா’ நிறுவனத்தின் இயக்குநர் ரஷாந்த் கார்க் ஆகிய 3 பேர் மீதும் பொருளாதார தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க நிதித்துறை மொத்தம் 60 தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் கப்பல்களுக்கு தடைகள் விதித்துள்ளது என்பதும், இதில் சீனா மற்றும் ஹாங்காங்கைச் சேர்ந்த சுமார் 20 நிறுவனங்களும், சீனாவைச் சேர்ந்த 4 தனிநபர்களும் இடம்பெற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.