

புதுடெல்லி: கப்பல் கட்டுமானத்தில் உலகளாவிய மையமாக இந்தியா உருவெடுக்கும் என மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
இந்திய கப்பல் கட்டும் தளங்களின் திறனை வெளிப்படுத்தும் வகையில், ராணுவ தளவாட உற்பத்தித் துறை சார்பில் டெல்லியில் நேற்று கருத்தரங்கு நடைபெற்றது. இதில் பங்கேற்ற அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது:
இந்தியாவில் உள்ள அரசு மற்றும் தனியார் கப்பல் கட்டும் தளங்கள், ஆயிரக்கணக்கான குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் ஆதரவுடன் செயல்படுகின்றன.
இவை, எஃகு, இயக்க அமைப்புகள், மின்னணு சாதனங்கள், உணர் கருவிகள் மற்றும் மேம்பட்ட போர்முறை அமைப்புகள் வரையில் ஒரு வலுவான தொடர்பை உருவாக்கி செயல்படுகின்றன. இந்திய கப்பல் கட்டும் தளங்கள் ஏற்கெனவே விமானம் தாங்கி கப்பல்கள், ஆராய்ச்சி கப்பல்கள் மற்றும் வணிகக் கப்பல்களை தயாரித்துள்ளன. இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல்படையில் உள்ள கப்பல்கள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டவை ஆகும்.
எனவே, கப்பல் கட்டுமானம், பழுதுபார்த்தல் மற்றும் கடல்சார் கண்டுபிடிப்புகளுக்கான உலகளாவிய மையமாக உருவெடுக்கும் ஆற்றல் இந்தியாவுக்கு உள்ளது. இந்தியாவின் கப்பல் கட்டுமானத்துறையின் திறனை உலக நாடுகள் பயன்படுத்திக்கொள்ள முன்வர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.