

மும்பை: இந்தியா முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் தற்போது நடைமுறையிலுள்ள பாஸ்டேக் முறையின்படி வாகனங்கள் வரிசையில் நின்று, தடுப்புகள் திறந்த பிறகே செல்ல வேண்டியுள்ளது. இதனால் தேவையற்ற போக்குவரத்து நெரிசலும், எரிபொருள் மற்றும் நேர விரயமும் ஏற்படுகின்றன.
இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வாக, வாகனங்கள் எங்கும் நிற்காமல் தங்களின் வழக்கமான வேகத்திலேயே கடந்து செல்லும் வகையில் தடையற்ற சுங்கக் கட்டண முறையை நடைமுறைக்கு கொண்டு வர மத்திய அரசு தீவிரமாக பணியாற்றி வருகிறது.
இந்நிலையில், மும்பையில் நேற்று நடைபெற்ற குளோபல் ஃபின்டெக் விழாவில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி பேசியதாவது: ஓராண்டில், பலவழி தடையற்ற போக்குவரத்து மாதிரியின் கீழ் நமது அனைத்து சுங்கச்சாவடிகளிலும் தடையற்ற சுங்கக் கட்டண முறையை செயல்படுத்த விரும்புகிறோம். டிசம்பர் 2026-க்குள் இதை முடிக்குமாறு அதிகாரிகளுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்.
அதன்படி இந்த ஆண்டின் இறுதிக்குள் 60 முதல் 70 சதவீதப் பணிகள் நிறைவடையும் என்று நான் நம்புகிறேன். 2027 மார்ச் மாதத்திற்குள், நாடு முழுவதும் தடையற்ற சுங்கச்சாவடி அமைப்பு செயல்படுத்தப்படும். சுங்கச்சாவடிகளில் காத்திருக்கும் நேரம் குறைவதால் ஆண்டுக்கு சுமார் 71 கோடி மணி நேரமும், 56 கோடி லிட்டர் எரிபொருளும் சேமிக்கப்படும்.
எரிபொருளின் மதிப்பு ஏறத்தாழ ரூ.5,250 கோடியாகவும், பயணிகள் மிச்சப்படுத்தும் நேரத்தின் பொருளாதார மதிப்பு ரூ. 68,500 கோடியாகவும் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தால் சுங்கச்சாவடி இயக்க செலவு 2% முதல் 4% ஆக குறையும். இது ஆண்டுக்கு ரூ.6,000 கோடி முதல் ரூ.7,000 கோடி வரை சேமிக்க உதவும். இவ்வாறு அவர் பேசினார்.