

புதுடெல்லி: பல்வேறு திட்டங்களின் கீழ் தமிழ்நாட்டுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி, அமல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் என்னென்ன என்பது தொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: "மத்திய அரசின் பல்வேறு துறைகள் மூலம் தமிழ்நாடு மாநிலத்துக்கு பல திட்டங்களுக்கு நிதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், பல திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. 2026-27ம் நிதியாண்டுக்கான (பட்ஜெட் மதிப்பீடுகள்) வரி பகிர்மானத் தொகையாக 58,021 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், மானிய உதவித்தொகை 2025-26ம் நிதியாண்டில் தமிழ்நாட்டுக்கான பட்ஜெட் ஒதுக்கீடு 23,834 கோடி ரூபாயாக உள்ளது.
2014 முதல் 2026 வரை வரிப் பகிர்வு தொகை ரூ.4 லட்சம் கோடியாகவும், மானிய உதவி ரூ.2.55 லட்சம் கோடியாகவும் உள்ளது. மேலும் மூலதனச் செலவினங்களுக்காக மாநிலங்களுக்கு சிறப்பு உதவி வழங்கப்பட்டு வருகிறது. பல்வேறு ரயில் திட்டங்கள் உட்பட தமிழகத்துக்கு பிரதமரால் அர்ப்பணித்து வைக்கப்பட்டுள்ளன.
மதுரை- போடி நாயக்கனூர் இடையே 90 கி.மீ தொலைவிலான ரயில் பாதை மின்மயமாக்கல், தெற்கு ரயில்வே பிரிவில் முக்கியத்துவம் வாய்ந்த இரட்டை வழிப்பாதை (நாகர்கோவில் டவுன் – கன்னியாகுமரி மற்றும் ஆரல்வாய் மொழி – நாகர்கோவில்), மண்டல ரயில் போக்குவரத்து இணைப்புத் திட்டங்களை ரயில்வே அமைச்சகம் செயல்படுத்தியுள்ளது.
மேலும், பயணியர் / சரக்குப் போக்குவரத்து திறனையும் மேம்படுத்தியுள்ளது. தற்போது ரூ.33,467 கோடி செலவில் 22 ரயில்வே திட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மேலும், 8 வந்தே பாரத் ரயில் சேவைகள் தமிழகத்தில் செயல்பாட்டில் உள்ளன. சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்துக்கான மொத்த செலவு ரூ.63,246 கோடி ரூபாயில் 65 சதவீதம் மத்திய அரசு நிதியுதவி அளிக்கிறது. தமிழ்நாட்டில் கடந்த 2025ம் ஆண்டு முதல் 7,000 கி.மீ.க்கும் அதிகமான தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
கடந்த 2025-ம் ஆண்டு ஏப்ரலில் ரூ.8,000 கோடி மதிப்பிலான பல்வேறு சாலைத் திட்டப்பணிகளுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டி வைத்துள்ளார். பாரத்மாலா திட்டத்தின் கீழ் பெங்களூரு – சென்னை விரைவுச்சாலை, உள்ளிட்ட பசுமை வழிச்சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
தூத்துக்குடி விமான நிலைய வளாகத்தில் ரூ.450 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய விமான முனைய கட்டடத்தை பிரதமர் கடந்த ஆண்டு திறந்து வைத்தார். கடந்த 2024-ல் திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலைய வளாகத்தின் 1,100 கோடி ரூபாய்க்கும் கூடுதல் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள விமான முனையக் கட்டடத்தை பிரதமர் தொடங்கி வைத்தார்.
உள்நாட்டு சுற்றுலா திட்டத்தின் கீழ், கருப்பொருள் அடிப்படையிலான சுழற்சி சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில், 73 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி தளத்தை அருங்காட்சியகமாக அமைக்க மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அடிக்கல் நாட்டினார்.
மாநிலங்களுக்கு இடையேயான மின் விநியோக அமைப்பை வலுப்படுத்தும் வகையில் கூடங்குளம் அணு மின் நிலையத்தின் 3வது மற்றும் 4-வது அலகுகளுடன் இணைப்பதற்கான பணிகளுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
தமிழ்நாட்டில் தேனி மற்றும் தஞ்சாவூர் உட்பட நாடு முழுவதும் 85 புதிய கேந்திரிய வித்யாலயா பள்ளிகளை அமைப்பதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.