15% வரி விதிப்பு: ட்ரம்ப்பின் புதிய அறிவிப்புக்குப் பின் இந்தியாவுக்கு எத்தனை சதவீதம்?

15% வரி விதிப்பு: ட்ரம்ப்பின் புதிய அறிவிப்புக்குப் பின் இந்தியாவுக்கு எத்தனை சதவீதம்?
Updated on
3 min read

வாஷிங்டன்: அமெரிக்க உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பின், அனைத்து நாடு​களுக்​கும் கூடு​தலாக 10 சதவீதம் வரி விதிக்​கப்​படும் என்று முதலில் அறிவித்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், பின்னர் அந்த வரி விதிப்பை 15% ஆக உயர்த்தியுள்ளார். இதன் தாக்கம் குறித்து பார்ப்போம்.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடந்த ஆண்டு ஏப்​ரலில் 100-க்கும் மேற்​பட்ட நாடு​களுக்கு புதிய வரி வி​கிதங்​களை அறி​வித்​தார். இதை எதிர்த்து அமெரிக்​கா​வின் 12 குறு, சிறு நிறு​வனங்​கள் மற்​றும் ஜனநாயக கட்சி ஆட்சி நடத்​தும் 12 மாகாண அரசுகள் சார்​பில் சர்வதேச வர்த்தக நீதி​மன்​றத்​தில் வழக்​குத் தொடரப்​பட்​டது. இந்த வழக்​கில், அதிபர் ட்ரம்​பின் புதிய வரி விதிப்பை ரத்து செய்து நீதிமன்றம் உத்​தர​விட்​டது.

இதை எதிர்த்துப் பெடரல் சர்க்​யூட் நீதி​மன்​றத்​தில் அமெரிக்க அரசு மேல்​முறை​யீடு செய்​தது. அங்​கும் ட்ரம்ப்​பின் புதிய வரி ​வி​திப்பு செல்​லாது என்று தீர்ப்​பளிக்​கப்​பட்​டது. இதை எதிர்த்து கடந்த ஆண்டு நவம்​பரில் உச்ச நீதி​மன்​றத்​தில் அமெரிக்க அரசு மேல்​முறை​யீடு செய்​தது.

தலைமை நீதிபதி ராபர்ட்ஸ் தலை​மையி​லான 9 நீதிப​தி​கள் அமர்வு வழக்கை விசா​ரித்​து, நேற்று முன்​தினம் தீர்ப்பு வழங்​கியது. தலைமை நீதிபதி உட்பட 6 நீதிப​தி​கள், ட்ரம்​ப்பின் வரி விதிப்பு செல்லாது என்​றும், 3 நீதிப​தி​கள் வரி விதிப்பு செல்​லும் என்​றும் தீர்ப்பளித்​தனர். பெரும்​பான்மை நீதிப​தி​களின் தீர்ப்​பின் அடிப்படையில் புதிய வரி விதிப்பு ரத்து செய்​யப்​பட்​டுள்​ளது.

முதலில் 10%... அடுத்து 15%

உச்ச நீதி​மன்​றத் தீர்ப்பு வெளி​யான 3 மணி நேரத்​தில் அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறும்போது, “உச்ச நீதி​மன்​றத்​தின் தீர்ப்பு மிகுந்த அதிருப்தி அளிக்​கிறது. சில வெளி​நாட்டு சக்​தி​களின் சதியால் உச்ச நீதி​மன்​றம் எதிர்​மறை​யாக தீர்ப்பு வழங்கியிருக்கிறது. சில நீதிப​தி​கள் முட்​டாள்​கள்​போல செயல்பட்டுள்​ளனர். அவர்​களுக்கு தேசப்​பற்று இல்லை.

நான் விதித்த பரஸ்பர வரி விதிப்பை மீண்​டும் அமல்​படுத்​துதற்​கான மாற்று வழிகள் குறித்து தீவிர​மாக ஆலோ​சித்து வரு​கிறேன். முதல்​கட்​ட​மாக, அதிபரின் சிறப்பு அதி​காரத்​தைப் (சட்​டப்பிரிவு 122) பயன்​படுத்தி அனைத்து நாடு​களுக்​கும் கூடு​தலாக 10 சதவீத வரி விதிக்​கப்​படு​கிறது. ஏற்​கெனவே வசூலித்த வரியை திருப்பி வழங்குவது குறித்து உச்ச நீதி​மன்​றம் எந்த உத்​தர​வை​யும் பிறப்பிக்க​வில்​லை. எனவே, அமெரிக்க அரசு ஏற்​கெனவே வசூலித்த வரிப் பணத்தை எந்த நிறு​வனத்​துக்​கும் திரும்ப வழங்காது” என்றார் அதிபர் ட்ரம்ப்.

அதன்பின்னர் அதிபர் ட்ரம்ப் வெளியிட்ட திடீர் அறிவிப்பில், “பல தசாப்தங்களாக அமெரிக்காவைச் சுரண்டி வரும் நாடுகள் மீது விதிக்கப்பட்டிருந்த 10 சதவீத உலகளாவிய இறக்குமதி வரியை, சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட 15 சதவீத அளவுக்கு உடனடியாக உயர்த்துகிறேன். அடுத்த சில மாதங்களில், சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட புதிய வரிகளைத் தீர்மானித்து வெளியிடுவோம்” என்று தெரிவித்தார்.

தாக்கம் என்ன?

அமெரிக்காவின் இந்தப் புதிய வரிக் கொள்கை குறிப்பிட்ட நாடுகளை மட்டும் இலக்கு வைக்காமல், ஒட்டுமொத்த இறக்குமதியையும் கட்டுப்படுத்தும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக வர்த்தக அமைப்பு உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் இந்த நடவடிக்கைக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கக்கூடும் எனத் தெரிகிறது. இந்த மாற்றத்தால் சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகளுடனான வர்த்தகப் போர் மேலும் தீவிரமடையும் என்று பொருளாதார நிபுணர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

அமெரிக்காவின் இந்தப் புதிய வரிக் கொள்கை அமலுக்கு வரும்போது, கார் மற்றும் மின்னணுப் பொருட்களின் விலை உலக அளவில் உயரக்கூடும். இது ஒருபுறம் அமெரிக்கப் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் என்று ட்ரம்ப் கூறினாலும், நுகர்வோர் மீதான விலைவாசி உயர்வு மற்றும் சர்வதேச சந்தையில் ஏற்படக்கூடிய நிலைத்தன்மை குறித்து நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். வரும் வாரங்களில் இது தொடர்பாகப் பிற நாடுகள் எடுக்கப்போகும் எதிர் நடவடிக்கைகள் உலக வர்த்தகத்தின் போக்கை தீர்மானிக்கும் எனத் தெரிகிறது.

இந்​தி​யா​வுக்கு எவ்வளவு வரி?

அதிபர் ட்ரம்​பின் புதிய வரி விதிப்​புக்கு முன்​பாக இந்​தி​யப் பொருட்களுக்கு அமெரிக்க அரசு 10 சதவீத வரியை விதித்திருந்தது. எனினும், அமெரிக்கா​வுக்கு மிக​வும் விருப்​ப​மான நாடு என்ற அந்​தஸ்து காரண​மாக இந்​தி​யப் பொருட்​களுக்கு 3.5 சதவீத வரி மட்​டுமே வசூலிக்கப்​பட்டு வந்​தது. இந்​நிலை​யில், கடந்த ஆகஸ்ட் மாதம் இந்​தி​யப் பொருட்​களுக்கு 25 சதவீத வரியை அமெரிக்கா விதித்​தது. தொடர்ந்​து, ரஷ்​யா​விடம் இருந்து கச்சா எண்​ணெய் வாங்​கு​வ​தாக குற்​றம்​சாட்டி மேலும் 25 சதவீத வரி விதிக்​கப்​பட்​டது. ஒட்​டுமொத்​த​மாக இந்​தி​யப் பொருட்களுக்கு அமெரிக்க அரசு 50 சதவீத வரியை விதித்து வந்​தது.

இதன் தொடர்ச்சியாக, இந்த மாத தொடக்​கத்​தில் இந்​தி​யப் பிரதமர் மோடி​யும், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்​பும் தொலைபேசியில் முக்​கியப் பேச்​சு​வார்த்தை நடத்​தினர். இதையடுத்​து, அதிபர் ட்ரம்ப் சமூக வலை​தளத்​தில் வெளி​யிட்ட பதிவில், “இந்​தி​யப் பொருட்​கள் மீதான வரி 18 சதவீத​மாகக் குறைக்கப்​படும்” என்று அறி​வித்​தார். இது தொடர்​பாக இரு நாடுகளிடையே மார்ச் மாதம் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்​தாகும் என்று எதிர்​பார்க்​கப்பட்டது.

இந்தச் சூழலில், அமெரிக்க உச்ச நீதி​மன்​றத்​தின் தீர்ப்​பால் இந்​தியா உட்பட அனைத்து நாடு​களுக்​கும் அமெரிக்​கா​வின் பழைய வரி விதிப்பு நடை​முறை அமலுக்கு வந்​துள்​ளது. இதன்​படி, இந்​தி​யப் பொருட்​களுக்கு 3.5 சதவீத வரி மட்​டுமே விதிக்​கப்பட வேண்​டும். எனினும், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இப்போது அறி​வித்த 15 சதவீத வரி விதிப்பு பிப்.24-ம் தேதி முதல் அமலுக்கு வரு​கிறது. இதன்​படி, பழைய 3.5 சதவீத வரி, புதிய 15 சதவீத வரி என இந்​தி​யப் பொருட்களுக்கு 18.5 சதவீத வரி விதிக்​கப்​படும் என்று அமெரிக்க அதிபர் மாளிகை வட்​டாரங்​கள் தெரி​வித்​துள்​ளன.

இந்த வரி உயர்வின் மூலம் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் தகவல் தொழில்நுட்ப சேவைகள், மருந்துகள் மற்றும் ஆடைத் தொழில்கள் கூடுதல் சுமையைச் சந்திக்க நேரிடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

‘150 நாட்கள் மட்டுமே’

அமெரிக்க அரசி​யலமைப்பு சட்​டப் பிரிவு 122, கடந்த 1977-ம் ஆண்டில் நிறைவேற்​றப்​பட்​டது. சர்​வ​தேச அவசர பொருளா​தார அதி​கார சட்​டம் (ஐஇஇபிஏ) என்​றழைக்​கப்​படும் இந்த சட்​டத்​தில், அமெரிக்க அதிபருக்கு சிறப்பு அதி​காரங்​கள் வழங்​கப்​பட்டு உள்​ளன. இதன்​படி அமெரிக்க அதிப​ரால் வெளி​நாட்டு சொத்​துகளை முடக்க முடி​யும். டாலர், வங்கி பணப் பரி​மாற்​றங்​களை கட்​டுப்​படுத்த முடியும். இறக்​கும​தி, ஏற்​றுமதி சார்ந்த நடவடிக்​கைகளுக்கு தடை விதிக்க முடி​யும். பொருளா​தார விவ​காரங்​கள் தொடர்​பாக முக்​கிய முடிவு​களை எடுக்க முடி​யும்.

இந்த ஐஇஇபிஏ சட்​டத்​தின்​படியே புதிய வரி விகிதங்​களை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடந்த ஆண்டு அறி​வித்​தார். தற்​போது இதே சட்​டத்​தின்​படியே அனைத்து நாடு​களுக்​கும் கூடுதலாக 15 சதவீத வரியை அதிபர் ட்ரம்ப் விதித்​துள்​ளார். ஆனால், ஐஇஇபிஏ சட்​டத்​தின்​படி வெளி​யிடப்​படும் உத்​தர​வு​கள் தற்​காலிக​மாக 150 நாட்​கள் மட்​டுமே அமலில் இருக்​கும். அதன்​பிறகு அமெரிக்க நாடாளு​மன்​றத்​தின் ஒப்​புதலை பெற்​றால் மட்​டுமே இந்த 15 சதவீத வரியை நீட்​டிக்க முடி​யும். இல்​லை​யெனில் ட்ரம்ப் உத்​தரவு காலா​வ​தி​யாகி விடும் என்று அமெரிக்க சட்ட நிபுணர்​கள்​ தெரி​வித்​துள்​ளனர்​.

15% வரி விதிப்பு: ட்ரம்ப்பின் புதிய அறிவிப்புக்குப் பின் இந்தியாவுக்கு எத்தனை சதவீதம்?
Dahaad: சாதிய, பாலின பேதத்துக்கு எதிராக கர்ஜிக்கும் காவல் அதிகாரி அஞ்சலி | திரை தேவதைகள் 06

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in