

மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் | கோப்புப் படம்
புது டெல்லி: டெல்லிக்கு வருகை தந்துள்ள அமெரிக்க குழுவினருடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் நிலையான முன்னேற்றம் இருப்பதாக மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.
இந்திய - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளுக்காக அமெரிக்க குழு டெல்லி வந்துள்ளது. இந்த நிலையில், இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் குறித்து அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் இன்று தெரிவித்தார்.
இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அமெரிக்க குழுவுடனான பேச்சுவார்த்தைகளில் தொடர்ந்து முன்னேற்றம் காணப்படுகிறது. நாங்கள் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தை நோக்கி முன்னேறி வருகிறோம். நான் அமெரிக்க அதிகாரி குழுவை சந்திக்கவும் வாய்ப்புள்ளது” என்றார்.
அமெரிக்க துணை வர்த்தக பிரதிநிதி ரிக் ஸ்விட்சர் தலைமையிலான ஒரு குழு, இந்திய பிரதிநிதி ராஜேஷ் அகர்வாலுடனான இரண்டு நாள் வர்த்தக பேச்சுவார்த்தைகளுக்காக டெல்லி வந்துள்ளது. இந்த ஒப்பந்தத்துக்கான அமெரிக்காவின் தலைமை பிரநிதியான தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்க வர்த்தக பிரதிநிதி பிரெண்டன் லிஞ்ச், இந்திய வர்த்தகத் துறையின் இணைச் செயலாளர் தர்பன் ஜெயினுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
அமெரிக்க அதிகாரிகள் கடைசியாக செப்டம்பர் 16 அன்று இந்தியாவுக்கு வருகை தந்தனர். செப்டம்பர் 22 அன்று, வர்த்தக பேச்சுவார்த்தைகளுக்காக அமெரிக்காவுக்கு அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையிலான குழு சென்றது.
இந்திய - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் இந்த ஆண்டே இறுதியாகும் என்று நம்புவதாக இந்திய வர்த்தக செயலாளர் ராஜேஷ் அகர்வால் சமீபத்தில் கூறியிருப்பதால், தற்போதைய அமெரிக்க குழுவின் பேச்சுவார்த்தை முக்கியத்துவம் பெறுகிறது.