பி.கோபாலகிருஷ்ணன்
அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம்: ஏற்றுமதி வளர்ச்சிக்கு உத்வேகம் அளிக்கும் - இந்திய ஏற்றுமதி நிறுவனங்கள் கூட்டமைப்பு நம்பிக்கை
கரூர்: இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் நாட்டின் ஏற்றுமதி வளர்ச்சிக்கு வலுவான உத்வேகத்தை அளிக்கும் என்று இந்திய ஏற்றுமதி நிறுவனங்கள் கூட்டமைப்பு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக கூட்டமைப்பின் தெற்கு மண்டலத் தலைவரும், கரூர் ஜவுளி உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவருமான பி.கோபாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்திய- அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தில், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் மீதான வரிகளை 18 சதவீதமாக குறைக்க அமெரிக்கா ஒப்புக் கொண்டுள்ளது.
இந்த வளர்ச்சி இரு தரப்பு வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவதிலும், அமெரிக்க சந்தையில் இந்திய ஏற்றுமதிகளின் போட்டித் தன்மையை கணிசமாக அதிகரிப்பதிலும் மைல் கல்லாக இருக்கும்.
இந்திய-அமெரிக்கா நாடுகளிடையே வளர்ந்து வரும் உறவு மற்றும் பொருளாதார கூட்டாண்மையைப் பிரதிபலிக்கும் இந்த ஒப்பந்தத்தை முழு மனதுடன் வரவேற்கிறோம்.
இது இந்திய எம்எஸ்எம்இ ஏற்றுமதியாளர்களுக்கு மாற்றமாக அமையும். இந்த வரிக்குறைப்பால் பொறியியல் பொருட்கள், ஜவுளி, மருந்து, ரசாயனம், தோல்பொருள், ரத்தினக் கற்கள், நகைகள், விவசாயப் பொருட்கள் போன்ற முக்கிய ஏற்றுமதி துறைகளுக்கு பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறைந்தவரிக் கொள்கை, போட்டித் தன்மையை மேம்படுத்தும். மேலும், இந்த ஒப்பந்தம், முன்னர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆர்டர்களை உடனடியாக வெளியிட வழி வகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய வளர்ச்சித் திறன் விரிவாக்கம், புதிய முதலீடுகள், ஏற்றுமதி சார்ந்த தொழில்களில் பெரிய அளவிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.
தமிழகத்தில் உள்ள ஜவுளி மையங்கள், குறிப்பாக கரூர், திருப்பூர், கோவை, ஈரோடு ஆகிய பகுதிகள் இந்த வர்த்தக ஒப்பந்தத்தால் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த ஒப்பந்தம் வரும் மாதங்களில் இந்தியாவின் ஏற்றுமதி வளர்ச்சிக்கு வலுவான உத்வேகத்தை அளிக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
