

புதுடெல்லி: துபாயில் தேஜஸ் போர் விமானம் விபத்துக்குள்ளானதான் தாக்கத்தால், அந்த ரக விமானத்தை தயாரிக்கும் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தின் பங்குகள் இன்று காலை முதல் 3% குறைந்து வர்த்தகம் ஆகி வருகின்றன.
கடந்த வெள்ளிக்கிழமை (நவம்பர் 21) அன்று துபாய் விமானக் கண்காட்சியில் இந்தியா சார்பில் கலந்துகொண்ட தேஜஸ் போர் விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தை இயக்கிய விமானி நமன்ஷ் சியால் உயிரிழந்தார். இதற்கான காரணத்தை விசாரிக்க விசாரணைக் குழுவை அமைப்பதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.
அரசுக்குச் சொந்தமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம் தேஜஸ் விமானத்தை தயாரிக்கிறது. இது ஜெனரல் எலக்ட்ரிக் என்ஜின்களால் இயக்கப்படுகிறது. இந்த இரு நிறுவனங்களும் விபத்து குறித்த விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக தெரிவித்துள்ளது.
இந்தச் சூழலில், தேஜஸ் விமானத்தை தயாரிக்கும் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தின் பங்குகள் இன்று காலை முதல் 3% குறைந்து வர்த்தகம் ஆகி வருகின்றன.
இதுகுறித்து விளக்கமளித்துள்ள இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம், ‘இந்த விபத்து விதிவிலக்கான சூழ்நிலைகளால் ஏற்பட்ட ஒரு குறிப்பிட்ட நிகழ்வு. இந்த விபத்து நிறுவனத்தின் வணிக செயல்பாடுகள் மற்றும் எதிர்கால திட்டங்களை பாதிக்காது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.