

16-வது நிதிக்குழுவின் பரிந்துரையை ஏற்று மாநிலங்களுக்கு ரூ.1.4 லட்சம் கோடி வழங்க உள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
மத்திய பட்ஜெட்டை நேற்று தாக்கல் செய்த மத்திய நிதியமைச்சர் கூறுகையில், ‘‘மாநிலங்களுக்கான வரிப் பகிர்வு 41 சதவீதமாக தொடர வேண்டும் என்று 16-வது நிதிக்குழு மத்திய அரசுக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பரிந்துரை செய்தது. இதை மத்திய அரசு ஏற்றுக்கொண்டு, மாநிலங்களுக்கு 2026-27-ம் நிதியாண்டுக்கு ரூ.1.4 லட்சம் கோடியை வழங்கும். இது ஊரக, நகர்ப்புற உள்ளாட்சிகள் மற்றும் பேரிடர் மேலாண்மை மானியங்களை உள்ளடக்கியது’’ என்றார்.
15,000 பள்ளிகள், 500 கல்லூரிகளில் அனிமேஷன் ஆய்வகங்கள்: கற்பனை, அறிவுசார் சொத்து, கலாச்சாரம், ஊடகம், வடிவமைப்பு, கைவினைப்பொருட்கள், அனிமேஷன், காட்சி கலைகள், விளையாட்டு, ஃபேஷன், திரைப்படம் மற்றும் விளம்பரம் தொடர்பான தொழில்கள் சார்ந்த பொருளாதாரம் ‘ஆரஞ்சு பொருளாதாரம்’ என அழைக்கப்படுகிறது.
இதை ஊக்குவிக்க நாடு முழுவதும் 15,000 பள்ளிகள் மற்றும் 500 கல்லூரிகளில் அனிமேஷன், காட்சி கலைகள், விளையாட்டு மற்றும் காமிக்ஸ் (ஏவிஜிசி) மற்றும் படைப்பாற்றல் ஆய்வகங்களை, மும்பை ஐஐசிடி உருவாக்க மத்திய அரசு உதவும். இத்துறையில் 2030-ம் ஆண்டுக்குள் 20 லட்சம் நிபுணர்களை உருவாக்காக வேண்டியுள்ளது என்பதால் ‘ஆரஞ்சு பொருளாதாரத்தை ’ ஊக்குவிக்கும் திட்டம் கொண்டுவரப்படுகிறது.