

ரோம்: இத்தாலியின் ஐவெகோ நிறுவனத்தை கையகப்படுத்தியதைத் தொடர்ந்து, டாடா சன்ஸ் தலைவர் என். சந்திரசேகரன் அந்நாட்டு பிரதமர் மெலோனியை சந்தித்து பேசினார்.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இத்தாலியின் பிரபல வணிக வாகன தயாரிப்பு நிறுவனமான ஐவெகோ குழுமத்தை 4.3 பில்லியன் டாலர் (சுமார் ரூ.36,300 கோடி) மதிப்பிலான மெகா ஒப்பந்தம் மூலம் அதிகாரப்பூர்வமாகத் தன்வசப்படுத்தியுள்ளது. 2008-ம் ஆண்டில் ஃபோர்டு நிறுவனத்திடமிருந்து ஜாகுவார் லேண்ட் ரோவர் பிராண்டுகளை வாங்கியதற்கு பிறகு, டாடாவின் மிகப்பெரிய சர்வதேச ஆட்டோமொபைல் ஒப்பந்தம் இதுவாகும். இதன் மூலம் ஐவெகோ நிறுவனம் டாடா மோட்டார்ஸின் துணை நிறுவனமாக மாறியுள்ளது.
இத்தாலியின் டுரின் நகரில் உள்ள ஐவெகோ தலைமையகத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உலகளாவிய பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய டாடா சன்ஸ் தலைவர் என். சந்திரசேகரன், ஐவெகோ நிறுவனத்தை டாடா மோட்டார்ஸ் கையகப்படுத்தியதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
அதனை தொடர்ந்து பேசிய அவர், “மிகவும் வலுவான இத்தாலிய வேர்களையும், ஐரோப்பா மற்றும் லத்தீன் அமெரிக்கா முழுவதும் வலுவான இருப்பையும் கொண்ட ஐவெகோ குழுமம், லாரிகள், பேருந்துகள் மற்றும் பவர் டிரெய்ன்கள் ஆகியவற்றில் மிகப்பெரிய தொழில்துறை பாரம்பரியம், புகழ்பெற்ற பிராண்டுகள், தொழில்நுட்பம் மற்றும் உலகத் தரம் வாய்ந்த திறன்களைக் கொண்டுள்ளது.
இந்நிறுவனத்தை கையகப்படுத்தும் செயல்முறை முழுவதும் ஊக்கமளித்து ஆதரவளித்த இத்தாலிய அரசுக்கும், பிரதமர் ஜார்ஜியா மெலோனி மற்றும் தொழில் துறை அமைச்சர் அடோல்போ உர்சோ ஆகியோருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
இதனையடுத்து இரு நிறுவனங்களும் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில், “இரு நிறுவனங்களின் ஒருங்கிணைந்த வருவாய் சுமார் ரூ. 2,28,000 கோடியாக உள்ளது. கையகப்படுத்தும் செயல்முறை தொடர்ந்து நடைபெற்று வருகிறது, தற்போது இரு நிறுவனங்களும் ஒருங்கிணைப்பு மற்றும் கூட்டு திட்டமிடலின் அடுத்த கட்டத்துக்கு நகர்கின்றன” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐவெகோ நிறுவனத்தை கையகப்படுத்திய நிலையில், டாடா சன்ஸ் தலைவர் என். சந்திரசேகரன் நேற்று முன்தினம் இத்தாலி தலைநகர் ரோமில் பிரதமர் ஜார்ஜியா மெலோனியை சந்தித்துப் பேசினார்.
பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லமான பலாஸ்ஸோ சிகியில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, ஐவெகோ நிறுவனத்தை கையகப்படுத்தும் டாடா குழுமத்தின் முழு செயல்திட்டத்தையும் ஜார்ஜியா மெலோனியிடம் அவர் விளக்கினார். இந்தியாவுக்கும் இத்தாலிக்கும் இடையிலான தொழில் மற்றும் பொருளாதார உறவுகள் வலுப்பெற்று வரும் நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.