

தூத்துக்குடி: தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி 2025-2026-ம் நிதியாண்டின் 3-வது காலாண்டில் ரூ.342 கோடி லாபம் ஈட்டியுள்ளது. தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் இயக்குநர் குழு கூட்டம் தூத்துக்குடியில் நடைபெற்றது.
இதில் 2025- 2026-ம் நிதியாண்டின் மூன்றாம் காலாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியான சலீ எஸ்.நாயர் வெளியிட்டார். இதுகுறித்து அவர் கூறியதாவது: 2025- 2026-ம் நிதியாண்டின் 3-ம் காலாண்டில் வங்கியின் மொத்த வணிகம் 14.28% வளர்ச்சியடைந்து ரூ.1 லட்சத்து 7 ஆயிரத்து 470 கோடியை எட்டியுள்ளது.
வைப்புத் தொகை ரூ.56,707 கோடியாகி உள்ளது. மொத்த கடன் தொகை ரூ.50,763 கோடியாக உள்ளது. இது 16.30% வளர்ச்சியாகும். மொத்த வாராக்கடன் 1.32 சதவீதத்தில் இருந்து 0.91 சதவீதமாகவும், நிகர வாராக்கடன் 0.41 சதவீதத்தில் இருந்து 0.20 சதவீதமாகவும் குறைந்துள்ளது. வங்கி பங்குகளின் புத்தக மதிப்பு ரூ.550.38-ல் இருந்து ரூ.617.22 ஆக அதிகரித்துள்ளது.
இந்த காலாண்டில் வங்கியின் சில்லரை, விவசாயம், சிறு, குறு நடுத்தர நிறுவனங்களின் கடன் தொகை 92.39 சதவீதத்தில் இருந்து 93.98 சதவீதமாக உயர்ந்துள்ளது. 2025- 2026-ம் நிதியாண்டு 3-ம் காலாண்டில் 12 புதிய கிளைகள் தொடங்கப்பட்டுள்ளன. வங்கி செயல்திறனை அதிகரிக்கவும், சேவைகளை விரிவுபடுத்தவும் பல விரைவான முயற்சிகளையும், தொழில்நுட்பம் சார்ந்த நடவடிக்கைகளையும் வங்கி மேற்கொண்டு வருகிறது. இணையவழி இ.பி.எப். செலுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.