

புதுடெல்லி: தெலங்கானா கிக்- பிளாட்ஃபார்ம் தொழிலாளர் சங்கம் (டிஜிபிடபிள்யூயு) மற்றும் இந்திய செயலி அடிப்படையிலான போக்குவரத்து தொழிலாளர் கூட்டமைப்பு (ஐஎப்ஏடி) ஆகியவை ஊதிய உயர்வு, மேம்பட்ட வேலை நிலைமைகளைக் உறுதி செய்யக்கோரி நேற்று நாடு தழுவிய வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது. இதில், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பங்கேற்றனர்.
வேலை நிறுத்தம் குறித்து தொழிற்சங்க தலைவர்கள் கூறுகையில், “முந்தைய ஊதிய முறையை மீண்டும் அமல்படுத்துதல், 10 நிமிட டெலிவரி மாதிரிகளைத் திரும்பப் பெறுதல், தன்னிச்சையான கணக்கு முடக்கங்களில் இருந்து பாதுகாப்பு, ஊதிய அமைப்புகளில் வெளிப்படைத்தன்மை, காப்பீடு, நலத்திட்டங்கள் உள்ளிட்ட சமூகப் பாதுகாப்புப் பலன்களை வழங்க கோரி இந்த போராட்டம் நடைபெறுகிறது” என்றனர்.
தொழில்துறை வட்டாரங்களின்படி, புத்தாண்டு தினத்தன்று தேவை உச்சத்தில் இருக்கும் நேரத்தில், இந்த வேலை நிறுத்தம் சோமாட்டோ, ஸ்விக்கி, பிளிங்கிட், இன்ஸ்டாமார்ட் மற்றும் ஜெப்டோ போன்ற உணவு விநியோகம் மற்றும் விரைவு வர்த்தக நிறுவனங்களின் செயல்பாடுகளைப் பாதிக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தான் சேவைகளில் ஏற்படும் இடையூறுகளை குறைக்கும் வகையில், புத்தாண்டையொட்டி மாலை 6 மணி முதல் இரவு 12 மணி வரையிலான உச்ச நேரத்தில் ஒரு ஆர்டருக்கான ஊக்கத்தொகை ரூ.120 முதல் ரூ.150 வரை உயர்த்தப்படுவதாக சோமாட்டோ நேற்று அறிவித்தது.
ஆர்டர்களின் எண்ணிக்கை மற்றும் தொழிலாளர்களின் இருப்பைப் பொறுத்து, நாள் முழுவதும் ரூ.3,000 வரை சம்பாதிக்கலாம் என்றும் அந்தத்தளம் உறுதியளித்தது. கூடுதலாக, ஆர்டர்களை மறுப்பது, ரத்து செய்வதற்கான அபராதங்களை சோமாட்டோ ரத்து செய்துள்ளது.
இதேபோல், ஸ்விக்கியும் டிச.31, ஜன.1 ஆகிய தேதிகளில் டெலிவரி ஊழியர்களுக்கு ரூ.10,000 வரை வருமானம் ஈட்டுவதற்கான வாய்ப்புகளை அறிவித்தது.