சுனில் மிட்டல்
மும்பை: இந்தியாவில் பயனரின் மாதாந்திர மொபைல் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் தலைவர் சுனில் மிட்டல் தெரிவித்துள்ளார்.
பார்தி ஏர்டெல் நிறுவனம் 65 கோடிக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுடன் உலகின் பெரிய தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. இந்தியாவில் முன்னணி டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றாகவும் உள்ளது. இந்நிலையில், ரீசார்ஜ் கட்டண உயர்வு குறித்து அவர் பேசியுள்ளார்.
பார்தி எண்டர்பிரைசஸின் 50-வது ஆண்டினை முன்னிட்டு நடைபெற்ற கூட்டத்தில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
பயனரிடமிருந்து மாதந்தோறும் கிடைக்கும் வருவாய் ரூ.300 என்று இருக்க வேண்டும் என்று நான் முன்பு பேசி உள்ளேன். ஆனால், அது 10 ஆண்டுகளுக்கு முன்னர் சொன்னது. இப்போது பணவீக்கம் மற்றும் அதிகரித்து வரும் செலவினங்களையும் பார்க்க வேண்டும்.
அதனால் பயனரிடமிருந்து மாதந்தோறும் கிடைக்கும் வருவாய் ரூ.350 என்று உயர்த்தப்பட வேண்டும். இதன் மூலம் டெலிகாம் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த முடியும். சீனாவில் 10 லட்சம் டவர்கள் உள்ளன. இந்தியாவில் 3.50 லட்சம் டவர்கள் தான் உள்ளன. தற்போதுள்ள நிலையில் இருந்து 50 சதவீதம் என்ற அளவிலாவது டவர் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும். அதற்கு கட்டணம் உயர்த்தப்பட வேண்டும்.
இந்திய டிஜிட்டல் கட்டமைப்பை மேம்படுத்த இது தேவைப்படுகிறது. யுபிஐ முதல் மின்னணு வணிகம் வரை அனைத்தும் இன்று நெட்வொர்க் சார்ந்து இயங்கி வருகிறது. அதனால் தான் டெலிகாம் நிறுவனங்களுக்கு பயனரிடமிருந்து மாதந்தோறும் கிடைக்கும் வருவாயை ரூ.350 என்று உயர்த்த வேண்டும் என்று சொல்கிறேன். இது நாளொன்றுக்கு ரூ.10 முதல் ரூ.12 என அமையும். அப்போதும் உலகின் மலிவான ரீசார்ஜ் திட்டங்கள் கொண்ட தேசமாக இந்தியா இருக்கும் என்று சுனில் மிட்டல் தெரிவித்துள்ளார்.
கடைசியாக கடந்த 2024 ஜூன் மாதம் ரீசார்ஜ் கட்டணங்களை 10 முதல் 25 சதவீதம் வரை டெலிகாம் நிறுவனங்கள் உயர்த்தி இருந்தன. இந்த சூழலில் 2026-ம் ஆண்டின் இறுதியில் ரீசார்ஜ் கட்டணம் உயரும் வாய்ப்புள்ளதாக வல்லுநர்கள் கணித்துள்ளனர். வோடபோன் ஐடியா நிறுவனத்தின் தலைவர் குமார் மங்களம் பிர்லாவும் ரீசார்ஜ் கட்டணங்களை மாற்றி அமைப்பது குறித்து தொடர்ந்து பேசி வருவது குறிப்பிடத்தக்கது.