கோழி இறைச்சியின் விலை திடீர் உயர்வு: கோவையில் கிலோ ரூ.340-க்கு விற்பனை

கோழி இறைச்சியின் விலை திடீர் உயர்வு: கோவையில் கிலோ ரூ.340-க்கு விற்பனை
Updated on
1 min read

கோவை: கோவையில் கோழி இறைச்சியின் விலை நேற்று ரூ. 100 முதல் ரூ. 140 வரை உயர்ந்து, கிலோ ரூ.340-க்கு விற்பனையானதால் அசைவ பிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பெரும்பாலான நடுத்தர குடும்பங்களின் இறைச்சி புரதத் தேவையை, ஈடுகட்டுபவையாக கோழி இறைச்சி இருந்து வருகிறது.

தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக ஒரு கிலோ கோழி இறைச்சி ரூ.180 - ரூ.200 என்ற விலையில் இருந்து வந்தது. கடந்த நான்கைந்து நாட்களாக உயர்ந்து வந்த விலையேற்றம், ஞாயிற்றுக்கிழமையான நேற்று கிலோ ரூ.340-ஐ தொட்டது.

பண்ணையில் கொள்முதல் விலை உயர்ந்திருப்பதால் விற்பனை விலையை ஏற்றியிருப்பதாக கடைக்காரர்கள் தெரிவித்தனர். இதனால் பலரும் இறைச்சியை வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

உணவகங்களும் இதனை வாய்ப்பாக பயன்படுத்தி விலையேற்றும் வாய்ப்பு உருவாகியுள்ளது. இதுகுறித்து இறைச்சி விற்பனை கடைக்காரர்கள் கூறியதாவது: நடப்பாண்டில் அதிக வெப்பம் காரணமாக, காலநிலை மாற்றத்தால் குஞ்சுகள் அதிக அளவில் இறந்துள்ளன.

இதனால் கொள்முதல் விலை உயர்ந்துள்ளது. கடந்த ஒரு வாரமாக விலை படிப்படியாக அதிகரித்து தற்போது ரூ.100 முதல் ரூ.140 வரை உயர்ந்துள்ளது. இதனால் கடைகளில் பலரும் விலையை கேட்டு அதிர்ச்சியடைந்தனர்.

வரும் நாட்களில் இதே விலை நீடித்தால், கோழி இறைச்சி நுகர்வு குறையும் வாய்ப்பு அதிகம். இதையடுத்து பலரும் மீன் இறைச்சியை வாங்கி பயன்படுத்தக்கூடும்.

கோவையில் தற்போது கோழி இறைச்சி உயிருடன் ரூ.210-க்கும், தோலுடன் ரூ.280-க்கும், கறி ரூ.300 முதல் ரூ.340 வரை விற்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

கறிக்கோழி பண்ணை வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயி ஒருவர் கூறும்போது, “கறிக்கோழி பண்ணை விவசாயிகள் கோழிக்குஞ்சுகளை வளர்க்க கூலியாக, கிலோவுக்கு ரூ. 20 வரை வழங்க வலியுறுத்திய நிலையில் ரூ.6.50 மட்டுமே நிறுவனங்கள் தருகின்றன.

கர்நாடகாவில் கடந்த சில மாதங்களாக கிலோவுக்கு ரூ.10 வழங்கி வருகின்றனர். எனவே இது தொடர்பாக தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்” என்றார்.

கோழி இறைச்சியின் விலை திடீர் உயர்வு: கோவையில் கிலோ ரூ.340-க்கு விற்பனை
பாங்காக் கேளிக்கை விடுதியில் தீ விபத்து: 27 பேர் உயிரிழப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in