“நீங்கள் இல்லாமல் இந்த வெற்றி இல்லை” - ‘ஆப்பிள்’ ஊழியர்களிடம் தெரிவித்த டிம் குக்

சிஇஓ பொறுப்பில் இருந்து விலகும் தருணத்தில் கடிதம்
டிம் குக்

டிம் குக்

Updated on
1 min read

சான் பிரான்சிஸ்கோ: நீங்கள் இல்லாமல் இந்த வெற்றி இல்லை என்று ஆப்பிள் நிறுவன ஊழியர்களுக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார் அந்நிறுவனத்தின் சிஇஓ பொறுப்பில் இருந்து விலகியுள்ள டிம் குக்.

ஆப்பிள் சிஇஓ-வாக தனது கடைசி பணி நாளில் இந்த கடிதத்தை குக் எழுதியுள்ளார். அதில் ஆப்பிள் நிறுவனர்களில் ஒருவரான ஸ்டீவ் ஜாப்ஸை அவர் நினைவு கூர்ந்துள்ளார். அந்த நிறுவனத்தின் புதிய சிஇஓ-வாக ஜான் டெர்னஸ் இன்று (செப்.1) பொறுப்பேற்கிறார்.

கடந்த 1998-ல் ஆப்பிள் நிறுவனத்தில் டிம் குக் இணைந்தார். 2005-ல் நிறுவனத்தின் தலைமை ஆப்பரேட்டிங் அதிகாரியாக பதவி உயர்வு பெற்றார். ஸ்டீவ் ஜாப்ஸின் மறைவுக்குப் பின்னர் கடந்த 2011 முதல் ஆப்பிள் சிஇஓ பணியை டிம் குக் கவனித்து வந்தார். அவரது பதவி காலத்தில் உலகத்தின் மதிப்பு மிக்க நிறுவனங்களில் முதலிடத்தை ஆப்பிள் பிடித்தது. திங்கட்கிழமை நிலவரப்படி ஆப்பிள் நிறுவனத்தின் ஒட்டுமொத்த மதிப்பு சுமார் 4.5 ட்ரில்லியன் டாலர்களை கடந்தது. இனி நிறுவனத்தின் நிர்வாக தலைவராக அவர் பணியாற்ற உள்ளார்.

“ஆப்பிள் நிறுவன சிஇஓ-வாக இன்றே எனக்கு கடைசி நாள். இந்த தருணம் என்றாவது ஒருநாள் வரும் என்பதை நான் அறிவேன். இருப்பினும் அந்த நாள் இப்போது வந்ததை ஏற்க கடினமாக உள்ளது. இந்த நிறுவனத்தையும், அதன் குழுவையும் நான் நேசிக்கிறேன். உங்களை தலைமை தங்கியது வாழ்நாளின் சிறப்பாக கருதுகிறேன்.

எனது வெற்றி என்று எதை சொன்னாலும் அதன் பின்னணியில் நீங்கள் உள்ளீர்கள். நீங்கள் இல்லாமல் இந்த வெற்றி இல்லை. இந்த பொறுப்பை நான் மிகவும் நேசிக்கிறேன். நான் ஆப்பிள் நிறுவனத்தில் இருந்து விலகவில்லை என்றாலும் நான் நேசித்த பொறுப்பில் இருந்து விலகுகிறேன். அடுத்த சிஇஓ ஜான் உங்களை திறம்பட வழிநடத்துவார்.

பேரண்டத்தில் நமது முத்திரை தடத்தை பதிக்க வேண்டும் என்று ஒரு முறை ஸ்டீவ் ஜாப்ஸ் சொல்லி இருந்தார். அதை நாம் சாத்தியமாக்கி உள்ளோம். இந்த பணியின் மூலம் நாம் எல்லோரும் அதிர்ஷ்டசாலிகள் என்பது உறுதியாகி உள்ளது” என்று டிம் குக் தெரிவித்துள்ளார்.

<div class="paragraphs"><p>டிம் குக்</p></div>
“இஸ்லாமியர்களை வாக்கு வங்கியாகவே காங். பயன்படுத்துகிறது” - மோகன் யாதவ் விமர்சனம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in