

மும்பை: சாதகமற்ற சர்வதேச நிலவரங்களால் இந்திய பங்குச் சந்தைகளில் நேற்றைய வர்த்தகம் கடும் சரிவைச் சந்தித்தது.
அமெரிக்கா - ஈரான் இடையிலான போர் பதற்றம், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் 100 டாலராக உயர்வு, அமெரிக்கப் பத்திரங்களின் வட்டி விகிதம் அதிகரிப்பு மற்றும் சர்வதேச சந்தையின் நிச்சயமற்ற தன்மை காரணமாக இந்திய பங்குச் சந்தைகள் நேற்று கடும் வீழ்ச்சியை சந்தித்தது.
நேற்றைய வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,248 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 73,580 புள்ளிகளாகவும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 384 புள்ளிகள் குறைந்து 23,063 புள்ளிகளாகவும் நிலைத்தன.
மிட்கேப் மற்றும் நிதித்துறை நிறுவன பங்குகளில் அதிகளவில் விற்பனை அழுத்தம் காணப்பட்டது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள முன்னணி நிறுவனங்களில் பஜாஜ் பைனான்ஸ் சுமார் 5.5% வரை சரிவைச் சந்தித்தது. ஆக்சிஸ் வங்கி (4.7%), பஜாஜ் பின்சர்வ் (4% மேல்) ஆகிய நிறுவனங்களும் அதிக சரிவைப் பதிவு செய்தன. அதேவேளையில், என்டிபிசி பங்கு மாற்றம் ஏதுமின்றி நிலைபெற்றது.