

சென்னை: தூசு, மழையில் இருந்து சூரிய சக்தி பேனல்களை பாதுகாக்கும் தொழில்நுட்பத்தைக் கண்ட றிந்து, காப்புரிமை பெற்றுள்ள எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம், அதை வணிக ரீதியில் உற்பத்தி செய்ய சென்னையைச் சேர்ந்த அன்பாண்ட் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
சூரிய சக்தி (சோலார்) பேனல்களை தூசு, மழையில் இருந்து பாதுகாத்து, அவற்றின் ஆயுள்காலத்தை அதிகரிக்கும் புதிய தொழில்நுட்பத்தை எஸ்ஆர்எம் பல்கலைக்கழக வேதியியல் துறைத் தலைவர் கே.அனந்த நாராயணன் தலைமையிலான ஆய்வுக் குழுவினர் உருவாக்கியுள்ளனர்.
இதற்கு காப்புரிமை பெற்றுள்ள எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம், இந்த தொழில்நுட்பத்தை வணிகரீதியாகப் பயன்படுத்த, சென்னையைச் சேர்ந்த ‘அன்பாண்ட்’ என்ற தனியார் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
சென்னையில் எஸ்ஆர்எம் பல்கலைக்கழக இணைவேந்தர் பி.சத்தியநாராயணனும், அன்பாண்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் எம்.ராஜனும் நேற்று ஒப்பந்தங்களை பரிமாறிக் கொண்டனர்.
வணிக ரீதியில் சோலார் பேனல்களை தயாரிக்க, எஸ்ஆர்எம் பல்கலைக்கழ கத்துக்கு அன்பாண்ட் நிறுவனம் ஆரம்ப நிதியாக ரூ.1 கோடி வழங்கியது. 7 ஆண்டுகளுக்கு உரிமைத் தொகையும் (ராயல்டி) வழங்க உள்ளது.
இந்த நிகழ்வில் பங்கேற்ற வர்கள் பேசியதாவது:
எஸ்ஆர்எம் பல்கலைக்கழக இணைவேந்தர் சத்திய நாராயணன்: இஸ்ரோ, டிஆர்டிஓ போன்ற மத்திய அரசின்உயர் தொழில்நுட்ப நிறுவனங்களுடன் சேர்ந்து பணியாற்றும் அன்பாண்ட் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவதை சாதனையாக கருதுகிறோம்.
ஆராய்ச்சிகள் வெறுமனே ஆய்வுக்கூட அளவில் நின்றுவிடாமல், தயாரிப்பு நிலைக்கு சென்று, சமூகத்துக்கு பயன்பட வேண்டும். அமரராஜா பேட்டரி, தனிஷ்க் ஆகிய நிறுவனங்களைத் தொடர்ந்து, தற்போது அன்பாண்ட் நிறுவனத்துடனும் எஸ்ஆர்எம் இணைந்து செயல்பட உள்ளது. முதல்முறையாக உரிமைத் தொகையும் பெறுகிறது. கல்வி நிறுவனங்களில் ஆராய்ச்சிப் பூங்காக்களை நிறுவ எஸ்ஆர்எம் பல் கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது.
துணைவேந்தர் சி.முத்தமிழ்ச்செல்வன்: கடந்த 10 ஆண்டுகளில் எரிசக்தி, சுற்றுச்சூழல், தண்ணீர், சுகாதாரம் தொடர்பான ஆராய்ச்சிப் பணிகளுக்காக ஆண்டுக்கு சராசரியாக ரூ.35 கோடி அளவுக்கு ஆராய்ச்சி நிதி பெற்று வருகிறோம். இதுவரை 534 ஆராய்ச்சிகளுக்கு காப்புரிமை பெற்று, அதில் 20 காப்புரிமைகளை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
ஆய்வுக் குழு தலைவர் பேராசிரியர் அனந்த நாராயணன்: செல்போனில் டிஸ்பிளேயை பாதுகாக்க ‘ஸ்கிரீன் கார்டு’ ஒட்டுவதுபோல, சோலார் பேனல்களை தூசு, மழை போன்றவற்றில் இருந்து பாதுகாக்கும் ‘கோட்டிங்’தான் இந்த தொழில்நுட்பம்.
இதனால் சோலார் பேனல்கள் 20 ஆண்டுகளுக்கு மேல் உழைக்கும். சுற்றுச்சூழல் பாதிப்புகளையும் நன்கு தாங்கும். சூரிய ஒளி நன்கு ஊடுருவும் வகையில் இந்த கோட்டிங் இருப்பதால், சோலார் பேனல்களின் மின் உற்பத்தி திறன் பல ஆண்டுகளுக்கு சீராக இருக்கும். இவ்வாறு அவர்கள் பேசினர்.
எஸ்ஆர்எம் பல்கலைக்கழகப் பதிவாளர் எஸ்.பொன்னுசாமி, அன்பாண்ட் நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குநர் எஸ்.எஸ்.ஆபிரகாம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.