“ஏஐ மூலம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக வாய்ப்பு” - ஸ்ரீதர் வேம்பு கருத்து

“ஏஐ மூலம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக வாய்ப்பு” - ஸ்ரீதர் வேம்பு கருத்து
Updated on: 
1 min read

தென்காசி: ஏஐ தொழில்நுட்பத்தால் எதிர்காலத்தில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக வாய்ப்புள்ளது என, ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்தார்.

தென்காசி ரயில்வே ரோட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை திறப்பு விழா நேற்று நடைபெற்றது.

மருத்துவமனையைத் திறந்துவைத்து, செய்தியாளர்களிடம் ஸ்ரீதர் வேம்பு கூறியதாவது: தற்போது சாஃப்ட்வேர் துறையில் 10 பொறியாளர்கள் செய்யக்கூடிய வேலையை, ஒரே ஒரு பொறியாளர் செய்யும் அளவுக்கு செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளது.

ஒவ்வொரு மாதமும் ஏஐ தொழில்நுட்பத்தில் புதுப்புது மாற்றங்கள் வந்துகொண்டு இருக்கின்றன. அனைவரிடமும் கையடக்கத் தொலைபேசி இருப்பதால் ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதும் வேகமாக அதிகரித்து வருகிறது.

இதனால் சாப்ட்வேர் பொறியாளர்கள் எதிர்காலத்தில் தங்களுடைய பணிச்சூழல் எப்படி இருக்கும் என்ற கவலையில் உள்ளனர். அணு ஆயுதத்தை அழிவுக்குப் பயன்படுத்தவும் முடியும், அதே அணுசக்தியில் இருந்து மின்சாரத்தையும் தயாரிக்க முடியும்.

அதுபோலத்தான் ஏஐ தொழில்நுட்பத்தையும் நல்ல நோக்கங்களுக்குப் பயன்படுத்த வேண்டும். கம்ப்யூட்டர் அறிமுகமானபோது, ஏராளமானோர் வேலை இழப்பார்கள் என்று அச்சம் ஏற்பட்டது.

ஆனால், கம்ப்யூட்டரை மையப்படுத்தி ஏராளமான புதிய வேலைவாய்ப்புகள் உருவாகின. அதேபோன்று தற்போது அறிமுகமாகியுள்ள ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியும் எதிர்காலத்தில் அதிக அளவில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக வாய்ப்பு உள்ளது.

ஏஐ தொழில்நுட்பத்தால் சில பாதிப்புகள் ஏற்பட்டாலும், அதன்மூலம் பல்வேறு துறைகளில் வளர்ச்சியும் ஏற்படும். ராணுவம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் ஏஐ தொழில்நுட்பத்தின் தேவை அதிகரித்து வருகிறது.

எனவே, இந்த தொழில்நுட்பம் குறித்து நாம் தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு, ஆக்கப்பூர்வமான வழிகளில் பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில், டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை சென்னை மண்டல மருத்துவச் சேவைகள் தலைவர் ரம்யா சம்பத், மூத்த துணைத் தலைவர்கள் யுகேந்தர், நந்தகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மருத்துவமனை திறப்பு விழாவை முன்னிட்டு, டிசம்பர் 31-ம் தேதி வரை பொதுமக்களுக்கு இலவச கண் பரிசோதனை சேவை வழங்கப்படுகிறது.

“ஏஐ மூலம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக வாய்ப்பு” - ஸ்ரீதர் வேம்பு கருத்து
ஸ்பெயின் கால்பந்து வீரர் உயிரிழந்த சம்பவம்: கோல் கீப்பருக்கு 12 போட்டிகளில் விளையாட தடை

X