

குஜராத் - முந்த்ரா துறைமுகத்தில் எல்பிஜி உடன் ‘ஷிவாலிக்’ சரக்கு கப்பல்.
அகமதாபாத்: சுமார் 40,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் குஜராத் மாநிலத்தில் உள்ள முந்த்ரா துறைமுகத்துக்கு திங்கட்கிழமை மாலை சரக்கு கப்பலான ‘ஷிவாலிக்’ வந்து சேர்ந்தது. கடந்த சனிக்கிழமை அன்று ஹார்முஸ் ஜலசந்தியை இந்தக் கப்பல் பாதுகாப்பாக கடந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, இந்த கப்பல் இன்று (மார்ச் 16) மாலை 5 மணி அளவில் குஜராத் வந்தடையும் என எதிர்பார்ப்பதாக இந்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் சிறப்பு செயலாளரான ராஜேஷ் குமார் சின்ஹா தெரிவித்திருந்தார். இதேபோல சுமார் 81,000 டன் கச்சா எண்ணெய் உடன் முந்த்ரா துறைமுகம் நோக்கி ‘ஜக் லாட்கி’ கப்பல் வந்து கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த கப்பல் நாளை (மார்ச் 17) இந்தியா வந்தடையும் என கூறியுள்ளார்.
ஈரானுடன் நேரடியாக இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடங்கியதை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் போற்றி பேசினார். ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இந்திய கப்பல்களை அனுமதித்ததற்கு ஈரான் பிரதிபலனாக எதையும் பெறவில்லை என்றும், நட்பின் அடிப்படையிலேயே இது நடந்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஹார்முஸ் ஜலசந்தி முடக்கம்:
அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் மற்றும் ஈரான் ராணுவத்துக்கு இடையிலான போர் தீவிரமடைந்து வருகிறது. இதன் எதிர்விளைவாக ஹார்முஸ் ஜலசந்தியில் சரக்குக் கப்பல் போக்குவரத்தை ஈரான் ராணுவம் முழுமையாக முடக்கி உள்ளது.
ஆசிய நாடுகளுக்கான கச்சா எண்ணெய், சமையல் காஸ் சரக்கு போக்குவரத்தில் 85 சதவீதம் இந்த ஜலசந்தி வழியாகவே நடைபெறுகிறது. அங்கு நாள்தோறும் 150-க்கும் மேற்பட்ட சரக்குக் கப்பல்கள் கடந்து செல்வது வழக்கம். ஆனால் தற்போது ஈரான் ராணுவம் அனுமதிக்கும் சில கப்பல்கள் மட்டுமே ஹார்முஸ் ஜலசந்தியைக் கடந்து செல்கின்றன. கடந்த சில நாட்களில் 18-க்கும் மேற்பட்ட சரக்கு கப்பல்களை ஈரான் ராணுவம் நடுக்கடலில் வெடிகுண்டுகள் மூலம் தகர்த்து உள்ளது.
இந்தச் சூழலில் இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து செல்ல ஈரான் அனுமதி அளித்தது. இதையடுத்து கடந்த 7-ம் தேதி கத்தாரின் ராஸ் லபான் துறைமுகத்தில் இருந்து சமையல் காஸுடன் புறப்பட்ட ஷிவாலிக் சரக்குக் கப்பல், போர் அச்சுறுத்தல் காரணமாக பெர்சிய வளைகுடா பகுதியில் நிறுத்தப்பட்டு இருந்தது. அந்தக் கப்பல் ஈரான் ராணுவ அனுமதியுடன் கடந்த சனிக்கிழமை அன்று பாதுகாப்பாக ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து இந்தியா வந்துள்ளது.