

சென்னை: தெற்காசியாவின் மிகப்பெரிய மற்றும் அதிவீன டிரெய்லர் மற்றும் டிரக் பாடி உற்பத்தி ஆலையை சாட்ராக் இன்ஜினியரிங் நிறுவனம் சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் தொடங்கியுள்ளது.
வணிக வாகன கட்டுமானத் துறையில் கடந்த 30 ஆண்டுகளாகச் சிறந்து விளங்கும் இந்நிறுவனத்தின் வரலாற்றில் இந்த புதிய ஆலை ஒரு முக்கிய மைல் கல்லாக பார்க்கப்படுகிறது.
இந்த புதிய ஆலையைத் திறந்து வைத்து சாட்ராக் நிறுவன நிர்வாக இயக்குநர் எம்.சி.பன்ட்வால் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள சாட்ராக் ஆலையில், 3.5 ஏக்கர் பரப்பளவில் உற்பத்திப் பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன. மாதத்துக்கு 800-க்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு பாடிகட்டும் திறன் கொண்ட இந்த ஆலை, தெற்காசியாவிலேயே மிகவும் மேம்பட்ட தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது.
ஜெர்மனியிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட அதிநவீன லேசர் கட்டிங் இயந்திரங்கள், கனடாவின் பிரஸ் பிரேக் உபகரணங்கள் மற்றும் ரோபோடிக் வெல்டிங் சிஸ்டம்ஸ் போன்றவை இங்கு நிறுவப்பட்டுள்ளன. இதன் மூலம் வாகனங்களின் தரம் மற்றும் உறுதித் தன்மை சர்வதேச தரத்தில் உறுதி செய்யப்படுகிறது. ‘மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ் 90 சதவீத உள்நாட்டு உதிரி பாகங்களைப் பயன்படுத்த வேண்டும் என்ற எங்கள் இலக்குக்கு இந்த ஆலை பெரும் பக்கபலமாக இருக்கும்.
தற்போது சென்னை மற்றும் பெங்களூருவில் உள்ள இரு ஆலைகளின் உற்பத்தி திறன் 1,500 அலகுகளாக உயர்ந்துள்ளது. அடுத்த கட்டமாக, 30 மாதங்களுக்கு ஒரு புதிய ஆலை என்ற இலக்குடன் ஜாம்ஷெட்பூர், புனே மற்றும் குஜராத் ஆகிய இடங்களில் புதிய கிளைகளைத் தொடங்க திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு பன்ட்வால் தெரிவித்தார்.