

வாஷிங்டன்: ரஷ்யா மற்றும் ஈரானிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அளிக்கப்பட்ட 1 மாத அனுமதி புதுப்பிக்கப்படாது என அமெரிக்கா கூறியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் கடந்த மார்ச் மாதம் மூடியதை அடுத்து எரிபொருளுக்கு உலகம் முழுவதும் தட்டுப்பாடு ஏற்பட்டு சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது.
இதையடுத்து ஈரான் மற்றும் ரஷ்யாவிடம் இருந்து எரிபொருள் வாங்க விதிக்கப்பட்ட தடைக்கு ஒரு மாத காலம் அமெரிக்கா விலக்கு அளித்தது. இதைப் பயன்படுத்தி ரஷ்யாவின் ராஸ்நெப்ட், லுக்ஆயில் ஆகிய நிறுவனங்களிடம் இருந்து 30 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் வாங்க ரிலையன்ஸ் உட்பட இந்திய சுத்திகரிப்பு நிலையங்கள் பல ஆர்டர் கொடுத்தன. இந்த விலக்கு ஏப்ரல் 11-ம் தேதியுடன் முடிந்தது.
இதேபோல் ஈரானிடம் கச்சா எண்ணெய் வாங்க விதிக்கப்பட்ட தடைக்கு கடந்த மார்ச் 20-ம் தேதி தளர்வு அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் 140 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் சர்வதேச சந்தையை சென்றடைந்து தட்டுப்பாட்டையும், விலை உயர்வையும் குறைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த தளர்வு வரும் 19-ம் தேதியுடன் முடிகிறது.
தற்போது ஹார்முஸ் ஜலசந்தியை அமெரிக்கா முற்றுகையிட்டு ஈரானுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது. இதனால் இங்கு விரைவில் கப்பல் போக்குவரத்து தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து ரஷ்யா மற்றும் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கு அளிக்கப்பட்ட தடை விலக்கு புதுப்பிக்கப்படாது என அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெசன்ட் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அமெரிக்காவின் ஜனநாயக கட்சி செட் உறுப்பினர் ரிச்சர்ட் ப்ளுபென்தால் கூறுகையில், “ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்க அளிக்கப்பட்ட தடை விலக்கு நீட்டிக்கப்படாது. இந்த விலக்கால் ரஷ்யாவுக்கு நாள் ஒன்றுக்கு 150 பில்லியன் டாலர் வருவாய் கிடைத்தது. இந்த நிதியை உக்ரைன் மக்களை கொல்ல ரஷ்யா பயன்படுத்தும்” என்றார்.