

மும்பை: நவி மும்பை சர்வதேச விமான நிலையத்தில் நேற்று பயணிகள் சேவை தொடங்கப்பட்டது. இந்த விமான நிலையம், 1,650 கால்பந்து மைதானங்களுக்கு இணையானது.
மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையம் செயல்படுகிறது. அங்கு விமான பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் நவி மும்பையில் புதிய விமான நிலையம் கட்ட 2007ம் ஆண்டில் மத்திய அரசு அனுமதி வழங்கியது. கடந்த 2018-ம் ஆண்டில் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டன.
முதலில் ஜிவிகே நிறுவனம் கட்டுமான பணிகளை மேற்கொண்டது. கடந்த 2019-ல் செப்டம்பர் மாதம் எல் அண்ட்டி நிறுவனத்திடம் கட்டுமான பணிகள் ஒப்படைக்கப்பட்டன. பின்னர் கடந்த 2021-ம் ஆண்டில் அதானி குழுமத்திடம் கட்டுமான பணிகள் அளிக்கப்பட்டன.
நவி மும்பை சர்வதேச விமான நிலையத்தில் மொத்தம் 4 முனையங்கள் கட்டப்பட உள்ளன. முதலாவது முனைய கட்டுமான பணிகள் நிறைவடைந்து உள்ளன. இந்த முனையத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த அக்டோபரில் திறந்து வைத்தார்.
இதைத் தொடர்ந்து நவி மும்பை விமான நிலையத்தில் நேற்று பயணிகள் சேவை தொடங்கப்பட்டது. கர்நாடக தலைநகர் பெங்களூருவில் இருந்து நேற்று காலை 8 மணிக்கு இண்டிகோவின் முதல் பயணிகள் விமானம் நவி மும்பையில் தரையிறங்கியது. அந்த விமானத்துக்கு தண்ணீரை பீய்ச்சி அடித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் நவி மும்பை விமான நிலையத்தில் இருந்து நேற்று காலை 8.40 மணிக்கு ஹைதராபாத்துக்கு முதல் பயணிகள் விமானம் புறப்பட்டது. வரும் பிப்ரவரி மாதம் நவி மும்பை விமான நிலையம் 100 சதவீதம் செயல்படும் என்று விமான போக்குவரத்து ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் மேலும் கூறியதாவது: நவி மும்பை விமான நிலையம், இந்தியாவின் தேசிய மலரான தாமரையின் வடிவில் கட்டப்பட்டு உள்ளது. இதன் மொத்த பரப்பளவு 2,866 ஏக்கர். அதாவது 1,650 கால்பந்து மைதானங்களுக்கு இணையாக விமான நிலையம் அமைந்துள்ளது. முதலாவது முனையத்தை கட்ட ரூ.19,650 கோடி செலவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த முனையத்தின் மூலம் ஆண்டுக்கு 2 கோடி பயணிகளை கையாள முடியும்.
வரும் 2028ம் ஆண்டில் 2-வது முனையம், வரும் 2032ம் ஆண்டில் 3, 4-வது முனையங்கள் அடுத்தடுத்து பயன்பாட்டுக்கு வரும். நான்கு முனையங்களும் முழுமையாக பயன்பாட்டுக்கு வரும்போது ஆண்டுக்கு 9 கோடிக்கும் அதிகமான பயணிகளை கையாள முடியும். இங்கிருந்து ஒரே நாளில் 300-க்கும் மேற்பட்ட விமான சேவைகளை இயக்க முடியும். இந்த விமான நிலையத்தின் மூலம் நாட்டின் பயணிகள், சரக்கு போக்குவரத்து மேம்படும். நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடையும். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.