

புதுடெல்லி: பங்குச் சந்தை மசோதா மக்களவையில் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடு்த்து, அந்த மசோதாவை நாடாளுமன்ற குழுவுக்கு அனுப்பி வைப்பதென முடிவெடுக்கப்பட்டது.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று மக்களவையில் பங்குச் சந்தை மசோதாவை அறிமுகப்படுத்தினார். அப்போது திமுகவைச் சேர்ந்த எம்.பி. அருண்நேரு மற்றும் காங்கிரஸை சேர்ந்த மணீஷ் திவாரி ஆகியோர் மசோதாவை அறிமுக நிலையிலேயே கடுமையாக எதிர்த்தனர். இந்த மசோதா தனி ஒரு அமைப்புக்கு அதிகப்படியான அதிகாரங்களை வழங்குவதாகவும், இது அதிகாரப் பரவல் கொள்கைக்கு எதிரானது என்றும் அவர்கள் கருத்து தெரிவித்தனர்.
இதற்கு பதிலளித்த நிதியமைச்சர், பங்குச் சந்தை மசோதா குறித்து மேலும் விவாதிப்பதற்காக அதனை நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பி வைப்பதாக தெரிவித்தார். இதுபோன்ற எதிர்க்கட்சியினரின் கேள்விக்கான விவரங்களை அந்த குழுவில் விவாதிக்கலாம் என்றும் நிதியமைச்சர் தெரிவித்தார்.
அவை நடவடிக்கைகளுக்கு தலைமை தாங்கிய கிருஷ்ண பிரசாத்தென்னெட்டி, “மசோதாக்களை நாடாளுமன்ற குழுக்களுக்கு அனுப்பும் அதிகாரம் மக்களவை தலைவருக்கு உண்டு. இது குறித்து அவர் முடிவெடுப்பார்” என்றார்.
பங்குச் சந்தை மசோதா 2025 என்பது இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரிய சட்டம் 1992, டெபாசிட்டரீஸ் சட்டம் 1996, பத்திர ஒப்பந்தங்கள் (ஒழுங்குமுறை) சட்டம் 1956 ஆகியவற்றை ஒருங்கிணைந்த சட்டமாக மாற்ற இந்த மசோதா முயல்கிறது. இது முதலீட்டாளர் பாதுகாப்பை வலுப்படுத்தவும், நாட்டின் நிதிச் சந்தைகளில் வணிகம் செய்வதை எளிதாக்குவதையும் முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.