‘இன்றே உங்கள் கடைசி வேலை நாள்’ - ஊழியர்களுக்கு அதிர்ச்சி அளித்த ஆரக்கிள் நிறுவனம்

‘இன்றே உங்கள் கடைசி வேலை நாள்’ - ஊழியர்களுக்கு அதிர்ச்சி அளித்த ஆரக்கிள் நிறுவனம்
Updated on
1 min read

நியூயார்க்: முன்னணி சர்வதேசத் தொழில்நுட்ப நிறுவனமான ஆரக்கிள், தனது செலவினங்களைக் குறைக்கவும் செயற்கை நுண்ணறிவு கட்டமைப்பை விரிவுபடுத்தவும் மேற்கொள்ளும் மறுசீரமைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, மீண்டும் பெருமளவிலான ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யத் தொடங்கியுள்ளது.

நேற்று (செப்.14) அதிகாலை 6 மணி அளவில் ஊழியர்களுக்கு ஆரக்கிள் லீடர்ஷிப் என்ற பெயரில் மின்னஞ்சல் ஒன்று அனுப்பப்பட்டது. அதில், “இன்று உங்களுடைய கடைசி வேலை நாளாகும். நிறுவனத்தின் தற்போதைய தொழில் தேவைகள் மற்றும் அமைப்பு ரீதியான மாற்றங்களைக் கருத்தில் கொண்டு, உங்களுடைய பணியிடம் நீக்கப்படுகிறது என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

மின்னஞ்சல் வந்த சில நிமிடங்களிலேயே ஊழியர்களின் அலுவலக மின்னஞ்சல், ஸ்லாக், விபிஎன் மற்றும் நிறுவனத்தின் லேப்டாப் அணுகல் என அனைத்தும் உடனடியாகத் துண்டிக்கப்பட்டன. இதனால் ஊழியர்கள் தங்கள் இழப்பீட்டுத் தொகை குறித்த விவரங்களை அறிய தங்களின் தனிப்பட்ட மின்னஞ்சல் முகவரிகளை பதிவிட அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ஆரக்கிள் நிறுவனம் செயற்கை நுண்ணறிவு மற்றும் கிளவுட் தரவு மையங்களின் கட்டமைப்புக்காக தற்போதைய காலாண்டில் மட்டும் 28.5 பில்லியன் டாலர்களை முதலீடு செய்துள்ளது. வரும் ஆண்டுகளில் ஏஐ உள்கட்டமைப்புக்காக 90 பில்லியன் முதல் 95 பில்லியன் டாலர் வரை செலவிடத் திட்டமிட்டுள்ள நிலையில், செலவினங்களை ஈடுகட்ட இத்தகைய பணிநீக்கங்களை மேற்கொண்டு வருகிறது.

கடந்த மே 31-ஆம் தேதியுடன் முடிந்த நிதியாண்டில் ஏற்கெனவே 21,000 ஊழியர்களை (13%) பணிநீக்கம் செய்திருந்த ஆரக்கிள், தற்போது தனது மறுசீரமைப்புச் செலவுகளுக்காகக் கூடுதல் நிதியை ஒதுக்கியுள்ளது.

இம்முறை அமெரிக்காவில் தொடங்கப்பட்டுள்ள இந்தப் பணிநீக்க நடவடிக்கை, அடுத்தடுத்த கட்டங்களில் இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளின் மேம்பாட்டு மையங்களுக்கும் விரிவடையும் என கூறப்படுகிறது.

‘இன்றே உங்கள் கடைசி வேலை நாள்’ - ஊழியர்களுக்கு அதிர்ச்சி அளித்த ஆரக்கிள் நிறுவனம்
ஹார்முஸ் பாதுகாப்புச் செலவை பிற நாடுகள் அமெரிக்காவுக்கு தர வேண்டும்: ட்ரம்ப் கெடுபிடி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in