

புதுடெல்லி: வெங்காயக் கொள்முதலை அதிகரிக்கவும், விவசாயிகளுக்குச் சிறந்த வருவாயை உறுதி செய்யவும், வெங்காயம் கொள்முதல் செய்வதற்கான விலையை மத்திய அரசு நேற்று 13% உயர்த்தியுள்ளது.
இதைத் தொடர்ந்து வெங்காயத்தின் கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ.1,875-லிருந்து ரூ.2,125-ஆக உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு நேற்று முதலே அமலுக்கு வருவதாக மத்திய அரசின் அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் சார்பில் செயல்படும் ‘விலை நிலைத்தன்மை நிதியத்தின்’ கீழ் சந்தையில் வெங்காயத்தின் விலை குறைவதைத் தடுக்கும் நோக்கிலும், வெங்காய வியாபாரிகளுக்கு உதவும் நோக்கிலும் கடந்த சில மாதங்களில் 5 முறை வெங்காய கொள்முதல் விலையை மத்திய அரசு உயர்த்தியது. வெங்காய கொள்முதல் பருவம் தொடங்கியதில் இருந்து விலை அடுத்தடுத்து உயர்த்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மத்திய வேளாண் துறையின் 2025-26-ம் ஆண்டுக்கான 2-வது முன்மதிப்பீட்டின்படி, நாட்டின் வெங்காய உற்பத்தி 307.37 லட்சம் டன்களாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இது 2024-25-ல் இருந்த 307.67 லட்சம் டன் உற்பத்தியுடன் ஒப்பிடுகையில் ஏறக்குறைய சமமான அளவு என்று தெரியவந்துள்ளது.