

ஒடிசா விவசாயி தேபா போடியாமி தோட்டத்தில் விளைந்துள்ள மியாசாகி மாம்பழங்கள்.
புவனேஸ்வர்: ஒடிசாவின் மால்கான்கிரி மாவட்டம், தமாசா கிராமத்தைச் சேர்ந்த விவசாயி தேபா போடியாமி. இவர் தனது தோட்டத்தில் 4 ஆண்டுகளுக்கு முன்பு மியாசாகி மாமரக் கன்றுகளை நட்டார். இந்த மரக்கன்றுகள் தற்போது நன்கு வளர்ந்து காய்த்து குலுங்குகின்றன.
சர்வதேச சந்தையில் ஒரு கிலோ மியாசாகி மாம்பழம் ரூ.1.5 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த மாம்பழங்களை வாங்க விவசாயி தேபா போடியாமிடம் இப்போதே பலர் முன்பதிவு செய்துள்ளனர். விலை உயர்ந்த மாம்பழம் என்பதால் அவரது தோட்டத்தை சுற்றி திருடர்களின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் அவரும் அவரது குடும்பத்தினரும் 24 மணி நேரமும் மியாசாகி மாமரங்களுக்கு காவல் காத்து வருகின்றனர்.
இதுகுறித்து விவசாயி தேபாபோடியாமி கூறியதாவது: ஜப்பானைச் சேர்ந்த மியாசாகி மாமரங்கள் இந்திய மண்ணில் வளர்வது கடினம். மிகுந்த பராமரிப்பு காரணமாக எனது தோட்டத்தில் இவற்றை வளர்த்து உள்ளேன். தற்போது எனது தோட்டத்தில் 17 மியாசாகி மாமரங்கள் உள்ளன. இந்த மாமரங்கள் காய்த்து குலுங்குகின்றன. ஒவ்வொரு மாம்பழமும் 350 கிராம் எடையில் உள்ளன. இவை கீழே விழுந்து சேதமடைந்து விடக்கூடாது என்பதற்காக மரங்களில் வலைகளை கட்டி வைத்திருக்கிறேன்.
முன்பதிவு: எனது தோட்டத்தை திருடர்கள் நோட்டமிடுவது அதிகரித்து வருகிறது. இதன்காரணமாக இரவு, பகலாக நானும் எனது குடும்பத்தினரும் தோட்டத்திலேயே தங்கியிருக்கிறோம். கடந்த சில வாரங்களாக இரவில் மியாசாகி மாமரங்களுக்கு அடியில் தூங்கி வருகிறேன். இந்த மாம்பழங்களை வாங்க ஒடிசாவை சேர்ந்த பலர் முன்பதிவு செய்துள்ளனர். எனினும் அனைத்து மியாசாகி மாம்பழங்களையும் விற்க மத்திய, மாநில அரசுகளின் உதவியை நாடி உள்ளேன். இவ்வாறு விவசாயி தேபா போடியாமி தெரிவித்தார்.