

ஓரா மீன்
ராமேசுவரம்: டிட்வா புயலுக்கு பின்னர், கடலுக்குச் சென்ற பாம்பன் மீனவர்கள் வலையில் ஓரா மீன்கள் அதிகமாக கிடைத்தன.
இலங்கை அருகே தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான டிட்வா புயலால் தமிழகத்தில் மீனவர்கள் கடலுக்குக் செல்ல மீன்வளத் துறை அனுமதி வழங்கவில்லை. இந்நிலையில், 8 நாட்களுக்கு பின்னர் மன்னார் வளைகுடா கடல்பகுதியில் வானிலை சீரானதை தொடர்ந்து, பாம்பன் தெற்கு கடற்பகுதியிலிருந்து 80-க்கும் மேற்பட்டோர் விசைப்படகுகளில் அனுமதி டோக்கன் பெற்று, சுமார் 500 மீனவர்கள் நேற்று கடலுக்குச் சென்று நேற்று கரை திரும்பினர். இந்நிலையில், பாம்பன் கடற்பகுதியில் ஓரா மீன்களின் சீசன் தொடங்கியுள்ளது.
இது குறித்து பாம்பன் விசைப்படகு மீனவர்கள் கூறுகையில், “கரை திரும்பிய மீனவர்களின் வலையில் சீலா, சாவாளை, பாறை, கும்ளா, திருக்கை, மத்தி, பேசாளை, ஓரா விலை மீன் என பல்வேறு வகையான மீன்கள் பரவலாக கிடைத்திருந்தன.
குறிப்பாக, 50 படகுகளில் ஓரா மீன்கள் படகுக்கு தலா 2,000 கிலோ வரை கிடைத்ததால், பாம்பன் துறைமுகம் முழுவதும் ஓரா மீன்கள் கூடை, கூடையாக அதிகளவு நிரம்பி காணப்பட்டது. ஐயப்ப சாமி விரதம் மற்றும் திருக்கார்த்திகை திருவிழா காரணமாக மீன்களின் தேவை குறைந்ததால் வியாபாரிகள் ஓரா மீன்களை கிலோ ரூ. 80 முதல் ரூ. 100 வரையிலும் ஏலம் எடுத்தனர்” என்று அவர்கள் கூறினர்.