

மும்பை: இந்தியாவின் தேசியப் பங்குச் சந்தை, (என்எஸ்இ) சந்தை மூலதனத்தின் அடிப்படையில் அமெரிக்காவின் நாஸ்டாக் மற்றும் ஹாங்காங் பங்குச் சந்தை ஆகியவற்றைப் பின்னுக்குத்தள்ளி, உலகின் 5-வது பெரிய பட்டியலிடப்பட்ட பங்குச் சந்தையாக உருவெடுத்துள்ளது.
இந்திய தேசிய பங்குச் சந்தை கடந்த செப்டம்பர் மாதம் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, என்எஸ்இ பங்குகளின் விலை தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகிறது. தற்போதைய சந்தைத் தரவுகளின்படி, என்எஸ்இ-யின் சந்தை மூலதனம் சுமார் 59.7 பில்லியன் அமெரிக்க டாலராக (சுமார் ரூ.5.56 லட்சம் கோடி) உயர்ந்துள்ளது. இதன் மூலம், 58.1 பில்லியன் டாலர் மதிப்பு கொண்ட ஹாங்காங் பங்குச் சந்தையையும், 57.7 பில்லியன் டாலர் மதிப்பு கொண்ட நாஸ்டாக் நிறுவனத்தையும் என்எஸ்இ முந்தியுள்ளது.
சந்தை மதிப்பில் முதலிடத்தில் சிஎம்இ குரூப் 111.05 பில்லியன் டாலர் உள்ளது. இதைத் தொடர்ந்து இன்டர்காண்டினென்டல் எக்ஸ்சேஞ்ச் (95.50 பில்லியன் டாலர்), டாய்ச் போர்ஸ் (65.00 பில்லியன் டாலர்), லண்டன் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் குரூப் (60.30 பில்லியன் டாலர்) ஆகியவை உள்ளன. மும்பை பங்குச் சந்தையில் என்எஸ்இ பங்கு விலை ரூ.47.80 (2.18%) உயர்ந்து ரூ.2,236.10 என்ற அளவில் வர்த்தகமானது.
இதன் மூலம் ரூ.5.56 லட்சம் கோடி சந்தை மதிப்பை எட்டிய என்எஸ்இ இந்தியாவின் 9-வது பெரிய பட்டியலிடப்பட்ட நிறுவனமாக உயர்ந்துள்ளது. இதன் மூலம், ரூ.5 லட்சம் கோடி சந்தை மதிப்பு கொண்ட கோட்டக் மஹிந்திரா வங்கி மற்றும் எல்ஐசி ஆகிய முன்னணி நிறுவனங்களை என்எஸ்இ பின்னுக்குத் தள்ளியுள்ளது. வங்கி, நிதிச் சேவைகள் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை ஜாம்பவான்களின் வரிசையில் தற்போது என்எஸ்இ-யும் இணைந்துள்ளது.