

புதுடெல்லி: சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தும் எந்தத் திட்டமும் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயுத் துறை அமைச்சகம் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட தகவலில், ‘பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படும் என சில தகவல்கள் வெளியாகியுள்ளன. இது போன்ற திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை. மக்களிடையே பீதியை ஏற்படுத்துவதற்காக இதுபோன்ற தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன.
கடந்த 4 ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படாத ஒரே நாடு இந்தியாதான். சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள கச்சா எண்ணெய் விலை உயர்வால், இந்திய மக்களை பாதுகாப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசும், பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களும் எடுத்துள்ளன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளது. இதனால் உலகம் முழுவதும் எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 70 அமெரிக்க டாலரில் இருந்து 119 டாலர் வரை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது.
இதனால் உலகின் பல நாடுகளில் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்தது. ஆனால், இந்தியாவில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படவில்லை. இந்நிலையில், சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்த பிறகு பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.25 முதல் ரூ.28 வரை உயர்த்தப்படலாம் என கோடக் பங்குகள் நிறுவனம் அறிக்கை வெளியிட்டிருந்தது. இந்தப் பின்னணியில் மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.