

சென்னை: எல்ஐசியின் 70-வது ஆண்டு விழாவை முன்னிட்டு எல்ஐசியின் முதன்மை செயல் அதிகாரியும் மேலாண்மை இயக்குநருமான ஆர்.துரைஸ்வாமி பீமா பிளாட்டினம், ஜீவன் ரக் ஷா ஆகிய இரண்டு பாலிசிகளை அறிமுகப்படுத்தினார்.
இந்தத் திட்டங்கள் செப். 7-ம் தேதி முதல் கிடைக்கும். பீமா பிளாட்டினம் என்பது காப்பீடு மற்றும் சேமிப்பு இரண்டையும் வழங்கும் லாபப் பங்களிப்பற்ற பங்குச்சந்தைத் திட்டமாகும்.
இது ஒரு வரையறுக்கப்பட்ட பிரீமியம் திட்டம். பிரீமியம் செலுத்தும் காலத்தில் செலுத்தப்பட்ட ஒவ்வொரு ரூ.1,000 ஆண்டு பிரீமியத்துக்கு ரூ.70 உத்திரவாத கூடுதல் தொகையாக வரவு வைக்கப்படும்.
(பிரீமியம் செலுத்தும் காலம் + 5)-வது ஆண்டில் பாலிசிதாரருக்கு அடிப்படை காப்பீட்டுத் தொகையில் 70% பூஸ்டர் வருவாய் பலனாக வழங்கப்படும். பே-அவுட் காலத்தில் (பாலிசி காலம் மைனஸ் பாலிசி செலுத்தும் காலம்) ஒவ்வொரு ஆண்டு முடிவிலும் அடிப்படைக் காப்பீட்டுத் தொகையில் 10% சீரான வருவாய் பலனாக வழங்கப்படும்.
குறைந்த பட்ச அடிப்படைக் காப்பீட்டுத் தொகை ரூ.3 லட்சம். அதிகபட்ச அடிப்படைக் காப்பீட்டுத் தொகைக்கு உச்சவரம்பு இல்லை. பிரீமியம் செலுத்தும் காலம் 7, 10, 12, 15 மற்றும் 18 வருடங்கள்.
ஜீவன் ரக் ஷா ஒரு லாபப் பங்களிப்பற்ற பங்குச்சந்தை சாராத முழு இடர்க் காப்பீட்டுத் திட்டமாகும். குறைந்தபட்ச நுழைவு வயது 18 ஆண்டுகள். அதிகபட்ச நுழைவு வயது 45 ஆண்டுகள். குறைந்தபட்ச முதிர்வு வயது 33 ஆண்டுகள்.
அதிகபட்ச முதிர்வு வயது 60 ஆண்டுகள். குறைந்தபட்ச அடிப்படைக் காப்பீட்டுத் தொகை ரூ.5 லட்சம். அதிகபட்ச அடிப்படைக் காப்பீட்டுத் தொகை ரூ.24 லட்சம். பெண்களுக்கு சிறப்பு பிரீமிய விகிதங்கள் உண்டு. கூடுதல் விவரங்களை www.licindia.in என்ற இணையதளத்தைப் பார்த்து அறிந்து கொள்ளலாம்.