

புதுடெல்லி: எஸ்பிஐ ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: மத்திய அரசு அமல்படுத்தியுள்ள புதிய தொழிலாளர் சட்டத்தின் மூலம், குறுகிய கால அடிப்படையில் வேலையின்மை விகிதம் 1.3% வரை குறையும். நடுத்தர கால அளவில் இந்த புதிய சட்டத்தால் 77 லட்சம் கூடுதல் வேலைவாய்ப்புகள் உருவாகும்.
மேலும், முறைப்படுத்தப்பட்ட தொழிலாளர்களின் பங்கு தற்போது 60.4 சதவீதமாக உள்ள நிலையில் இந்த சட்டம் அமலுக்கு வந்துள்ளதையடுத்து அதன் பங்கு 75.5 சதவீதமாக உயரும். நாட்டின் தொழிலாளர் சந்தையை வலுப்படுத்தும் விதமாக சமூக துறை பாதுகாப்பு 85 சதவீதமாக அதிகரிக்கும்.
சேமிப்பு விகிதம் சுமார் 30 சதவீதமாக இருக்கும் நிலையில், இந்த சீரமைப்பு நடவடிக்கையால் தனி நபர் நுகர்வு நாளொன்றுக்கு ரூ.66 அதிகரிக்கும். இது, ஒட்டுமொத்த நுகர்வை நடுத்தர கால அடிப்படையில் ரூ.75,000 கோடி அளவுக்கு ஊக்குவிக்கும். உள்நாட்டு செலவினம் அதிகரிப்பதால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகமெடுக்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.