

சென்னை: அஞ்சல் துறை சார்பில், பிரீமியம் ஸ்பீடு போஸ்ட் சேவைகளை பிரபலப்படுத்தும் நோக்கில், நடமாடும் தியேட்டர் வேன் பிரச்சாரம் அண்ணாநகரில் தொடங்கப்பட்டுள்ளது.
இந்திய அஞ்சல் துறை சார்பில், ஆவணங்கள் மற்றும் பார்சல்களுக்கு உத்தரவாதத்துடன் அடுத்த நாள் பட்டுவாடா வழங்கும் ‘24 ஸ்பீடு போஸ்ட்’ மற்றும் ஆவணங்களுக்கு 2 நாட்களுக்குள் உத்தரவாதத்துடன் பட்டுவாடா வழங்கும் ‘48 ஸ்பீடு போஸ்ட்’ ஆகிய புதிய பிரீமியம் சேவைகள் புதுடெல்லியில் கடந்த மார்ச் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டன.
இந்த சேவைகள் தொடர்பாக, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக, சென்னை நகர மண்டலத்தின் வடக்கு கோட்ட அஞ்சல் துறை சார்பில், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பிரீமியம் ஸ்பீடு போஸ்ட் சேவைகளை பிரபலப்படுத்தும் விதமாக, நடமாடும் தியேட்டர் வேன் பிரச்சாரம் நேற்று அண்ணா நகரில் தொடங்கப்பட்டது.
இந்த வேன் பிரச்சாரத்தை, சென்னை நகர மண்டல அஞ்சல் துறை இயக்குநர் மேஜர் மனோஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதுகுறித்து, சென்னை நகர மண்டல அஞ்சல் அதிகாரிகள் கூறியதாவது: சென்னை நகரில் மொபைல் தியேட்டர் வேன் பிரச்சாரம் 60 நாட்கள் நடைபெறவுள்ளது.
நகரின் முக்கிய மக்கள் கூடும் பகுதிகளில் இவ்வேன்கள் இயக்கப்பட்டு, பிரீமியம் ஸ்பீடு போஸ்ட் சேவைகளின் சிறப்பம்சங்கள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கப்படும்.
24 ஸ்பீடு போஸ்ட் சேவை, அவசர மற்றும் காலக்கெடு முக்கியத்துவம் வாய்ந்த ஆவணங்கள் மற்றும் பார்சல்களுக்கு அடுத்த நாள் உத்தரவாதத்துடன் கூடிய பட்டுவாடா வசதியை வழங்குகிறது. முதல் கட்டமாக, டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு, ஐதராபாத் ஆகிய பெருநகரங்களில் இச்சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
24 மற்றும் 48 ஸ்பீடு போஸ்ட் சேவைகள் முறையே குறிப்பிட்ட கால வரம்பிற்குள் பட்டுவாடாவை உறுதி செய்வதுடன், ஒடிபி அடிப்படையிலான பாதுகாப்பான பட்டுவாடா, வாரத்தின் 7 நாட்களும் பட்டுவாடா, குறுஞ்செய்தி மூலம் அனுப்புகையை கண்காணிக்கும் வசதி, அதிகளவிலான பதிவுகளுக்கு இலவச சேகரிப்பு வசதி உள்ளிட்ட பல்வேறு மேம்பட்ட அம்சங்களைக் கொண்டுள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.
இந்நிகழ்ச்சியில், தமிழக அஞ்சல் வட்ட உதவி தலைமை அஞ்சல் துறை தலைவர் (வணிக வளர்ச்சி) கே.லெக் ஷ்மணன் பிள்ளை, சென்னை நகர வடக்கு கோட்ட முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பளர் எஸ்.பாக்கியலட்சுமி, சென்னை நகர மண்டல அஞ்சல் துறை உதவி இயக்குநர் ஜி.பாபு உள்பட பலர் பங்கேற்றனர்.