கோப்புப்படம்

கோப்புப்படம்

உசிலம்பட்டியில் மல்லிகைப் பூ கிலோ ரூ.12,000-க்கு விற்பனை!

Published on

மதுரை: உசிலம்பட்டியில் மதுரை மல்லிகைப் பூ இன்று (ஜன.9) ரூ.12,000-க்கு விற்பனையானது. அதேநேரம், மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் விற்பனைக்கு பூக்களே வரவில்லை.

தமிழகம் முழுவதும் உள்ள மலர் சந்தைகளில் மதுரை மல்லிகைப் பூவுக்கு தனி வரவேற்பு உள்ளது. மதுரை மல்லியின் மணமும், வெள்ளை நிறமும், குண்டு குண்டாக காணப்படும் தரமும் பார்ப்போர் மனதை கொள்கை கொள்ளும். ஆனால், கரோனா காலத்துக்குப் பிறகு மதுரை மல்லிகைப் பூ சாகுபடி பரப்பு குறைந்ததால், நிரந்தரமாகவே மல்லிகைப் பூ பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதனால், தற்போது சாதாரண நாட்களிலேயே மல்லிகைப் பூ விலை அதிகமாவும், முகூர்த்த நாட்களில் உச்சமும் தொடுகிறது.

தற்போது பனிக்காலம் என்பதால், மதுரை மல்லிகைப் பூ உற்பத்தி மேலும் குறைந்துள்ளது. இதனால், கடந்த சில நாட்களாகவே மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டுக்கு மல்லிகைப் பூ வரத்து குறைந்தது. இந்நிலையில், இன்று பூக்கள் வரத்து முற்றிலும் இல்லை. இதனால், உசிலம்பட்டி மலர் சந்தையில் மதுரை மல்லிகைப் பூ கிலோ ரூ.12 ஆயிரத்துக்கு விற்பனையானது. இது மதுரை மல்லிகைப் பூ விற்பனையில் புதிய உச்சமும், வரலாறும் ஆனது.

இதுகுறித்து மாட்டுத்தாவணி மீனாட்சி மொத்த பூ வியாபாரிகள் சங்கத்தின் பொருளாளர் முருகன் கூறுகையில், ‘நேற்று மதுரை மல்லி கிலோ ரு.6 ஆயிரத்துக்கு விற்பனையானது. இன்று காலையில் சிறிதளவே வந்த பூக்கள் உடனடியாக விற்பனையாகிவிட்டன. அதன்பிறகு விற்பதற்கு மல்லிகைப் பூக்களே இல்லை.

பூக்களின் இன்றைய விலை விவரம்: பிச்சி ரூ.1,200, முல்லை ரூ.1,300, செவ்வந்தி ரூ.100, சம்பங்கி ரூ.150, செண்டுமல்லி ரூ.50, கனகாம்பரம் ரூ.1,500, ரோஸ் ரூ.180, பட்டன் ரோஸ் ரூ.120, பன்னீர் ரோஸ் ரூ.200, கோழிக்கொண்டை ரூ.100, அரளி ரூ.300, மரிக்கொழுந்து ரூ.150, தாமரை (ஒன்றுக்கு) ரூ.20 என விற்பனையானது. விலை அதிகரிப்பால் பூக்கள் விற்பனை மிக சுமாராக உள்ளது. 300 கிலோவுக்கும் குறைவாகவே வரத்து உள்ளது.

பனியின் காரணமாக மல்லிகை விளைச்சலில் மிகப்பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், இதன் விலை தங்கத்தையே விஞ்சும் வகையில் உயரத் தொடங்கியுள்ளது. பனியின் தாக்கம் தொடர்வதால், பொங்கலை முன்னிட்டு இதே விலை நிலவரம் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது’ என்றார்.

“தவெக உடன் புதிய தமிழகம் கூட்டணியா?” - கிருஷ்ணசாமி விளக்கம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in