

புதுடெல்லி: பிளிங்கிட் தளத்தில் ரூ.3 லட்சம் விலை கொண்ட ஆப்பிள் ஐபோன் டியோ விற்பனைக்கு வந்த வெறும் 5 நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தது. இதையடுத்து, “இந்தியா ஒரு பணக்கார நாடு” என இணையவாசிகள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆப்பிள் நிறுவனத்தின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனான ஐபோன் டியோ இந்தியாவில் நேற்று விற்பனைக்கு வந்தது.
டெல்லியில் உள்ள செலக்ட் சிட்டிவாக் மாலில் அமைந்துள்ள ஆப்பிள் நிறுவனத்தின் சாகேத் ஸ்டோரில் இந்த போனை வாங்க கூட்டம் அலைமோதியது. டெல்லி-என்சிஆர் பகுதியில் பிளிங்கிட் தளத்தில் விற்பனைக்கு வந்த இந்த போன் அனைத்தும் வெறும் 5 நிமிடங்களில் விற்று தீர்ந்துவிட்டது. ரூ. 3 லட்சம் விலை கொண்ட இந்த ஸ்மார்ட் போனை வாங்குவதற்கு பயனாளர்களிடையே காட்டப்பட்ட அவசரம் தற்போது சமூக வலைதளங்களில் பல்வேறு விவாதத்தை கிளப்பியுள்ளது.
இவ்வளவு விலை உயர்ந்த போனை வாங்குவதற்கு ஏற்பட்டுள்ள இந்த போட்டி இந்தியா ஏழை நாடு அல்ல ஒரு பணக்கார நாடு என்பதை காட்டுவதாக பலர் கருத்துகளை பதிவிட்டுள்ளனர். இன்னும் சிலர், “ஆப்பிள் நிறுவனம் அந்த போனின் விலையை ரூ.10 லட்சமாக நிர்ணயித்திருக்க வேண்டும். ஆனால் அப்போதும் அது விற்றுத் தீர்ந்திருக்கும்” என்று கேலியாக பதிவிட்டுள்ளனர்.
பிளிங்கிட்டின் நிறுவனர் அல்பினிந்தர் தின்சா வெளியிட்ட பதிவில், “ஆப்பிள் ஐபோன் டியோ காலை 8.15 மணிக்கு விற்பனைக்கு வந்தது. ஐந்து நிமிடங்களுக்குள் அனைத்து போன்களும் விற்றுத் தீர்ந்து விட்டது. வரும் வாரங்களில் கூடுதல் ஸ்டாக்கை கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
ஆப்பிள் ஐபோன் டியோவின் ஆரம்ப விலை ரூ.2,99,900 ஆகும். மேலும், இதன் டாப்-எண்ட் மாடலின் விலை ரூ.4,49,900 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.