

ராஜேஷ் பி.லுந்த், ஆ.சக்திவேல், துரை பழனிச்சாமி, கார்த்திகேயன், குமார் துரைசாமி
கோவை/ திருப்பூர்: இந்தியா -ஐரோப்பிய யூனியன் இடையே வரியற்ற வர்த்தக ஒப்பந்தம் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஐரோப்பிய ஆணைய தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அந்தோனியோ கோஸ்டா ஆகியோர் முன்னிலையில் நேற்று முன் தினம் கையெழுத்தானது. இது தொழில்துறையினர் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
கோவை, திருப்பூர் தொழில் துறையினர் கூறியதாவது: இந்திய தொழில் வர்த்தக சபை தலைவர் ராஜேஷ் பி.லுந்த்: இந்த ஒப்பந்தம் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, சேலம், நாமக்கல் மற்றும் திண்டுக்கல் மாவட்ட பகுதிகளுக்கு வர்த்தகம், முதலீடு மற்றும் தொழில்துறை வளர்ச்சியில் மாற்றத்தை ஏற்படுத்தும். கோவை மற்றும் அண்டை மாவட்டங்களில் ஜவுளி, பொறியியல், பம்புகள், மோட்டார் உற்பத்தி என பல்வேறு தொழில் நிறுவனங்கள் பயன்பெறும்.
ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கழக தலைவர் ஆ.சக்திவேல்: ஆயத்த ஆடைத் துறையில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது இந்த ஒப்பந்தம். இந்திய ஆடைத் துறைக்கு ஒரு மைல்கல். அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதியை இரட்டிப்பாக்கும் வகையில், பெரிய ஊக்கத்தை அளிக்கும்.
ஐரோப்பிய யூனியன் சந்தையில் இந்திய ஆடை களுக்கு வர்த்தக வரி இன்றி அனுமதி கிடைப்பதால், ஐரோப்பிய சந்தையில் இந்தியாவின் போட்டித்திறனை பெரிதும் உயர்த்தும். புதிய முதலீடுகள் மற்றும் வேலை வாய்ப்புகளையும் உருவாக்கும். தற்போது ஐரோப்பிய சந்தையில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 3.01 சதவீதம் மட்டுமே உள்ளது.
இதன் மூலம், இந்திய நிறுவனங்கள் விலை அடிப்படையிலான போட்டியை விட தரம், வடிவமைப்பு மற்றும் நிலைத்தன்மை அம்சங்களில் அதிக கவனம் செலுத்தி போட்டியிட முடியும். ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்பெயின், இத்தாலி போன்ற முக்கிய ஐரோப்பிய நாடுகள் ஏற்கெனவே இந்தியாவிலிருந்து அதிக அளவில் ஆயத்த ஆடைகளை இறக்குமதி செய்து வருகின்றன.
இந்த புதிய ஒப்பந்தம் அந்த நாடு களுக்கு இந்தியாவின் ஆயத்த ஆடை ஏற்றுமதியை மேலும் அதிகரிக்கும். தற்போது இந்தியாவின் மொத்த ஆயத்த ஆடை ஏற்று மதியில், ஐரோப்பிய யூனியனின் பங்கு சுமார் 28 சதவீதம் ஆக உள்ளது. இந்திய ஆயத்த ஆடைப் பொருட்களுக்கான வரி நீக்கப்படுவதன் மூலம், வங்கதேசம், துருக்கி மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவுக்கு சமமான போட்டி நிலை கிடைக்கும்.
தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கத்தின் தலைவர் (சைமா) துரை பழனிச்சாமி: கடந்த 2007-ம் ஆண்டு தொடங்கிய பேச்சுவார்த்தை இன்றைக்கு நிறைவடைந்துள்ளது. அமெரிக்கா விதித்துள்ள அபரிமிதமான வரியினால் ஏற்பட்ட தாக்கத்தை இந்தியா விலும், ஐரோப்பாவிலும் குறைக்க இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும்.
ஜவுளி ஏற்றுமதிக்கு குறிப்பாக ஆயத்த ஆடைகள், வீட்டு உபயோக ஜவுளிப்பொருட்கள், தொழில்நுட்ப ஜவுளிபொருட்கள் மற்றும் துணிகள் ஏற்றுமதியை அதிகரிக்க உதவும். நூற்பு இயந்திரங்களை தவிர பெரும்பாலான நாடா இல்லா தறிகள், துணி சாயமிடும் மற்றும் அச்சிடும் இயந்திரங்கள் மிக முக்கியமாக உதிரி பாகங்களை சுமார் 3 பில்லியன் அமெரிக்கா டாலர் அளவுக்கு, ஆண்டுதோறும் இறக்குமதி செய்யும் இந்தியாவுக்கு இந்த ஒப்பந்தம் குறைந்தவிலையில், இயந்திரங்களையும், உதிரி பாகங்களையும் இறக்குமதி செய்ய உதவும்.
கொடிசியா தலைவர் கார்த்திகேயன்: ஏற்றுமதிக்கு நல்ல வாய்ப்பு. இறக்குமதிக்கான சுங்க வரியில் 30 பில்லியன் டாலர் அளவுக்கு சேமிப்புக்கு வழிவகுக்கிறது. இதனால் உற்பத்தி, சேவைத் துறைகள் பயன்பெறும். எம்.எஸ்.எம்.இ. துறையில் பெரும் ஊக்கம் தரும் அறிவிப்பாகும்.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் இணை செயலாளர் குமார் துரைசாமி: அமெரிக்காவின் வரிவிதிப்பால் ஏற்பட்ட பாதிப்புகளை ஈடுகட்டும் வகையில் இந்த ஒப்பந்தம் அமைந்துள்ளது. திருப்பூரில் இருந்து மொத்த ஜவுளி ஏற்றுமதி ரூ.44,500 கோடியாக உள்ளது. இதில் ஐரோப்பிய நாடுகளின் பங்கு ரூ.28 ஆயிரம் கோடியாகும். இந்த வரியற்ற வர்த்தக ஒப்பந்தத்தால் விரைவில் ஏற்றுமதி ரூ.50 ஆயிரம் கோடியாக அதிகரிக்கும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.